திருப்பூர் | போலி மருத்துவர் மூன்றாவது முறையாக கைது – நடந்தது என்ன?
செய்தியாளர்: ஹாலித்ராஜா
திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட முருகம்பாளையம் பகுதியில், கிருஷ்ணா நகர் 1வது வீதியில் ஹிமாலயா என்ற பெயரில் மருந்து கடை செயல்பட்டு வருகிறது. இந்த மருந்து கடையில், பொதுமக்களுக்கு சிகிச்சை அளிப்பதாக மாவட்ட ஆட்சியருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் திருப்பூர் இணை இயக்குனர் மீரா தலைமையிலான குழுவினர் இன்று அந்த மருந்து கடையில் அதிரடியாக ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது அந்த மருந்து கடையில் உரிமையாளர் ஜோலி அகஸ்டின் என்பவர் அப்பகுதியில் உள்ளவர்களுக்கு சிகிச்சை அளித்து வந்தது தெரியவந்தது. மேலும் மருந்து கடைக்கு உள்ளேயே இரண்டு கட்டில்கள் போட்டு அங்கு பொதுமக்களுக்கு சிகிச்சை அளிப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அங்கு நடத்தப்பட்ட விசாரணையில், அகஸ்டின் மருத்துவம் படிக்காமல் 12ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துவிட்டு மருத்துவம் பார்த்தது தெரியவந்தது.
தமிழ்நாட்டில் கடந்த 18 வருடங்களாக நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருவதும் தெரியவந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர் கடந்த 2017 மற்றும் 2024ம் ஆண்டுகளில் திருப்பூரில் போலியாக மருத்துவம் பார்த்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது மூன்றாவது முறையாக வீரபாண்டி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து மருத்துவ இணை இயக்குனராக அதிகாரிகள் மருந்து கடைக்கு சீல் வைத்தனர்.