கொள்ளை வழக்கில் தொடர்புடையவரை பிடிக்க வந்த காவலர்கள் மீது தாக்குதல்: 10 பேர் கைது

கொள்ளை வழக்கில் தொடர்புடையவரை பிடிக்க வந்த காவலர்கள் மீது தாக்குதல்: 10 பேர் கைது

கொள்ளை வழக்கில் தொடர்புடையவரை பிடிக்க வந்த காவலர்கள் மீது தாக்குதல்: 10 பேர் கைது
Published on

ஆம்பூர் அருகே கொள்ளை வழக்கில் தொடர்புடைய நபரை கைது செய்ய வந்த கோயம்புத்தூர் காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்திய ஊராட்சி மன்றத் தலைவர் உட்பட 17 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் துத்திப்பட்டு ஊராட்சி மன்றத் தலைவர் சுவேதா என்பவரின் கணவர் கணேசன். இவர் மீது கோயம்பத்தூர் மாவட்டத்தில் 4 கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், இவரை பிடிப்பதற்காக கோயம்பத்தூர் மாவட்டம் குனியமுத்தூர் குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் ஞானபிரகாசம் தலைமையில், தலைமை காவலர் ராஜாமுகமது, வடிவேலு, உள்ளிட்ட 5 காவலர்கள் துத்திப்பட்டு பகுதிக்கு நேற்று வந்தனர்.

அப்போது துத்திப்பட்டு ஊராட்சி மன்றத் தலைவர் சுவேதா மற்றும் அவரது கணவர் கணேசன் உட்பட அவரது ஆதரவாளர்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் எல்.மாங்குப்பம் பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க வந்தனர். அப்போது அங்கு இருந்த கோயம்புத்தூர் காவலர்கள் கணேசனை கைது செய்தனர்.

அப்போது தலைமை காவலர் ராஜாமுகமது, கணேசனை கைது செய்து காரில் ஏற்ற முயற்சித்துள்ளார். இதைப்பார்த்த கணேசனின் ஆதரவாளர்கள் மற்றும் அவரது மனைவி சுவேதா ஆகியோர் காவல் துறையினரிடம் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் அருகில் இருந்த வெல்டிங் கடைக்கு கணேசனை அழைத்துச் சென்று கை விலங்கை வெல்டிங் இயந்திரத்தை கொண்டு உடைத்து தூக்கி எறிந்துவிட்டு கணேசனை தப்பிக்க வைத்துள்ளனர்.

இதில் காயமடைந்த உதவி ஆய்வாளர் ஞானப்பிரகாசம் மற்றும் ராஜாமுகமது ஆகியோர் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளனர். பின்னர் உதவி ஆய்வாளர் ஞானப்பிரகாசம் உமராபாத் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் உமராபாத் காவல் துறையினர் துத்திப்பட்டு ஊராட்சி மன்றத் தலைவர் சுவேதா மற்றும் அவரது கணவர் உள்ளிட்ட 17 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இதில், 10 பேரை கைது செய்த உமராபாத் காவல் துறையினர் ஆம்பூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி கனிமொழி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள ஊராட்சி மன்றத் தலைவர் சுவேதா மற்றும் அவரது கணவர் கணேசன் உள்ளிட்ட 7 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com