நெல்லை: 2000 போலீசார் பாதுகாப்பு.. 4 மணி நேரம் நடைபெற்ற இறுதி ஊர்வலம்! யார் இந்த ரவுடி தீபக் ராஜா?
2000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு... கிட்டத்தட்ட 4 மணி நேரம் நடைபெற்ற இறுதி ஊர்வலம்... சேகுவேரா, பிடல் காஸ்ட்ரோ புத்தகத்தோடு அடக்கம் செய்யப்பட்ட உடல்... இப்படி பெரிய அரசியல்வாதிகளுக்கு நடைபெறும் இறுதி ஊர்வலத்தைபோல நடந்து முடிந்திருக்கிறது நெல்லை ரவுடி தீபக் ராஜாவின் இறுதி ஊர்வலம்.. யார் இவர்? நடந்தது என்ன?
நெல்லை மூன்றடைப்பு அருகே வாகைக்குளத்தை சேர்ந்த விவசாயி சிவகுருநாதனின் 2-வது மகன் தீபக் ராஜா. 32 வயதாகிறது. பாளையங்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி முடித்துள்ள இவர், அதன்பின் ஆந்திராவில் தனியார் கல்லூரியில் சட்டம் பயின்றதாக தெரிகிறது. தனது சமூகம் தொடர்பான ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்களில் தன்னை ஈடுபடுத்தி வந்த தீபக் ராஜா மீது, சிவகங்கை, தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 5 கொலை வழக்கு உட்பட அடிதடி வழக்கு என சுமார் இருபத்து மூன்றுக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
தீபக் ராஜாவின் சொந்த ஊரைச் சேர்ந்தவர்தான் முத்து மனோ.. தீபக் ராஜாவும் முத்து மனோவும் நெருங்கிய நண்பர்கள்.. சமூக ரீதியான பிரச்னைகள் எதுவென்றாலும் நண்பர்களாக இருவரும் சேர்ந்தே பங்கேற்று குரல்கொடுத்துள்ளனர். இதனிடையேதான் கடந்த 2012-ம் ஆண்டு பசுபதி பாண்டியன் என்பவரை கொலை செய்த வழக்கிலும், சுபாஷ் பண்ணையாரின் ஆதரவாளர்கள் இருவர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்திலும் இருவருக்கும் தொடர்பு இருந்ததாக தெரிகிறது.
இதனால், முத்து மனோவும், தீபக் ராஜாவும் தலைமறைவாக இருந்த நிலையில், முத்து மனோ மட்டும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரை சிறையில் வைத்தே ஒரு கும்பல் கொடூரமாக கொலை செய்துள்ளது. இதனால், நண்பனை கொலை செய்த விவகாரத்தில் பழிக்குப் பழி தீர்க்க, கண்ணன் என்பவரை தீபக் ராஜா கொலை செய்துள்ளார்.
இதனையடுத்து போலீஸால் கைது செய்யப்பட்ட தீபக் ராஜா சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையே, சிறையில் இருந்து வெளியே வந்த தீபக் ராஜா, காதலியை வரும் ஜூன் மாதத்தில் மணம் முடிக்க திட்டமிட்டார். இதற்காக அவரது காதலியின் தோழிகளுக்கு விருந்து வைக்க, கடந்த 20ம் தேதி நெல்லை கேடிசி நகர் பகுதியில் இருக்கக்கூடிய பிரபல தனியார் உணவகத்திற்கு சென்றுள்ளார் சாப்பாட்டையெல்லாம் முடித்து வெளியே வந்தபோது, மறைந்திருந்த ஆறு பேர் கொண்ட கும்பல் தீபக் ராஜாவை கொடூரமாக கொலை செய்துவிட்டு தப்பி ஓடியது.
இந்த விவகாரத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வந்த நிலையில், உண்மையான குற்றவாளி கைது செய்யப்படும் வரை உடலை வாங்க மாட்டோம் என்று உறவினர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். கிட்டத்தட்ட 7 நாட்கள் போராட்டம் நடைபெற்ற நிலையில் கொலை தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்துயடுத்துதான் 7 நாட்கள் போராட்டத்திற்குப் பின், தீபக் ராஜாவின் உடலை உறவினர்கள் பெற்றுக்கொண்டனர். நெல்லை அரசு மருத்துவமனையில் இருந்து, தீபக் ராஜாவின் சொந்த ஊரான வாகைகுளத்திற்கு, உடல் கொண்டு செல்லப்பட்ட நிலையில் தீபக் ராஜாவின் உடலை காண அவரின் ஆதரவாளர்கள் ஏராளமானோர் குவிந்தனர். இதனால் கிட்டத்தட்ட 2000-க்கும் அதிகமான போலீசார் குவிக்கப்பட்டர். அத்துடன் இறுதி ஊர்வலமானது கிட்டத்தட்ட 4 மணி நேரம் வரை நடைபெற்றது. இதனால் பல மணி நேரத்திற்கு நெல்லை - கன்னியாகுமரி நெடுஞ்சாலையே ஸ்தம்பித்தது.
இதற்கிடையே, அவரைஅடக்கம் செய்யும்போது, தோழர் தமிழரசன், ஃபிடல் காஸ்ட்ரோ மற்றும் சேகுவேராவின் புத்தகங்கள் வைத்து அடக்கம் செய்யப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி இணையத்தை ஆக்கிரமித்து வருகிறது. அடிதடி, கொலை என ஏராளமான வழக்குகள் அவர் மீது இருந்தாலும் அடிப்படையில் தீபக் ராஜா ஒரு புத்தக பிரியர் என்று அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர். அதனாலேயே அவர் உடலை அடக்கம் செய்யும்போதுகூட சேகுவேரா, காஸ்ட்ரோ புத்தகத்தோடு அடக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுகறிது. தீபக் ராஜாவின் கொலையால் திருநெல்வேலி மாநகரமே கடந்த சில நாட்களாக பரபரப்பாக இருந்தது குறிப்பிடத்தக்கது.