ரூ. 2.63 கோடி பணத்தை மோசடி செய்ததாக அரசுப்பள்ளி ஆசிரியர் உட்பட 3 பேர் கைது
ஒரு லட்சம் கட்டினால் பத்து மாதத்தில் ஒரு லட்சத்து 80 ஆயிரம் ஆக கொடுக்கப்படும் என்று கூறி 2.63 கோடி பணத்தை மோசடி செய்ததாக அரசுப்பள்ளி ஆசிரியர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
விழுப்புரம் மாவட்டம், பிள்ளையார் குப்பத்தைச் சேர்ந்த பிரகாஷ் உள்ளிட்ட 25 பேர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதாவிடம் புகார் ஒன்றை அளித்தனர். இந்த புகாரில், ஒன்ஸ் இன் டெக்னாலஜி என்ற பெயரில் இயங்கிய நிறுவனம் ரூபாய் ஒரு லட்சம் கட்டினால் பத்து மாதத்தில், ஒரு லட்சத்து 80 ஆயிரம் வழங்கப்படும் என அறிவித்து மோசடி செய்ததாக குறிப்பிட்டிருந்தனர்.
இந்நிலையில் மோசடியில் ஈடுபட்டதாக அந்த நிறுவனத்தைச் சேர்ந்த சக்திவேல் (எ) ஸ்ரீகாந்த் (43), காஞ்சிபுரம் கௌசல்யா (40), கோலியனூர் ராமசாமி (49) (அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் பாதிராப்புலியூர்) ஆகிய 3 பேரை விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
இவர்களிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையில் திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய 3 மாவட்டங்களை சேர்ந்த ஆசிரியர்களே பண ஆசையில் பணத்தை இழந்தது தெரியவந்துள்ளது. மேலும் மோசடி செய்த பணத்தில் விழுப்புரம் மற்றும் காஞ்சிபுரத்தில் சொத்து வாங்கி குவித்திருப்பதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து கைது செய்யப்பட்ட 3 பேரும் விழுப்புரம் குற்றவியல் நீதிமன்றம் 2-ல் நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.