பாத்ரூமில் விழுந்து எலும்புகளை உடைத்துக்கொண்ட கும்பல்: வாழ்த்திய போலீஸ் அதிகாரி..!
போலீசாரை தாக்கிவிட்டு ஓடிய 3 குற்றவாளிகளும் பாத்ரூமில் வழுக்கி விழுந்ததில் அவர்களின் எலும்புகள் முறிந்துவிட்டதாக தெரிவித்து கொண்ட ஐபிஎஸ் அதிகாரி அரவிந்தன் அவர்கள் விரைவில் குணம்பெற வாழ்த்துவதாக தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தவல்லி காவல்நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வருபவர் அன்பழகன். இவர் நேற்றிரவு காட்டுப்பாக்கத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவ்வழியாக இரு சக்கரவாகனத்தில் வந்த மூன்று பேரிடம் விசாரணையில் ஈடுபட்டார் அன்பழகன். காவலரின் கேள்விகளுக்கு அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளனர். இதனால் சந்தேகமடைந்த காவலர் அன்பழகன், செல்போன் செயலியை கொண்டு அவர்களை ஸ்கேன் செய்துள்ளார். காவல்துறையினர் பயன்படுத்தும் இந்த ஃபேஸ் ஆப்பில் குற்றவாளிகளின் பெயர்கள் மற்றும் அவர்கள் மீது காவல்நிலையத்தில் என்ன வழக்கு பதியப்பட்டுள்ளது என்ற குற்றப்பிண்ணனி போன்ற விவரங்கள் தெரியவரும்.
இதனிடையே காவலர் அன்பழகன் அவர்களை புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தபோது அதில் ஒருவன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியைக் கொண்டு காவலரை தாக்கினார். இச்சம்பவத்தில் படுகாயமடைந்த காவலருக்கு அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கை மற்றும் கால்களில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
குற்றவாளிகள் பிடிபட்டது எப்படி..?
இச்சம்பவம் தொடர்பாக பூவிருந்தவல்லி காவல்துறையினர் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். மேலும் இந்த மூவரையும் காவலர் அன்பழகன் தனது செல்போனில் படம்பிடித்திருந்தால் அதனைக் கொண்டு விசாரித்தனர். காவல்துறையினர் பயன்படுத்தும் ஃபேஸ் ஆப்பில் அந்தப் புகைப்படங்களை பதிவேற்றம் செய்தபோது அவர்கள் குறித்த விவரங்கள் தெரியவந்துள்ளது. மூன்று நபர்களில் இருவரின் விவரங்கள் அதில் இருந்தது.
காவலரை தாக்கியது பன்னீர்செல்வம் மற்றும் விஜயகுமார் என்பதும் இவர்கள் மீது 2கொலை வழக்கு நிலுவையில் உள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டது. குற்றவாளிகள் அந்தப்பகுதியை விட்டு வெளியேற வாய்ப்பு இல்லை என்பதால் காவல்துறையினர் அந்தப்பகுதியை சுற்றிவளைத்து தேடினர். அப்போது காட்டுப்பாக்கம் பகுதியில் பதுங்கி இருந்த மூவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
பாத்ரூமில் வழுக்கிய குற்றவாளிகள்
இந்நிலையில் போலீசாரை தாக்கிவிட்டு ஓடிய 3 குற்றவாளிகளும் பாத்ரூரில் வழுக்கி விழுந்ததில் அவர்களின் எலும்புகள் முறிந்துவிட்டதாக நம்பத்தகுந்த இடங்களில் இருந்து செய்திகள் வருகின்றன என ஐபிஎஸ் அதிகாரி அரவிந்தன் தெரிவித்துள்ளார்.. எனவே அவர்கள் விரைவில் நலம்பெற வாழ்த்துகிறேன் எனவும் அவர் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டார். ஆனால் சிறிது நேரத்தில் அவர் அந்தப் பதிவை நீக்கிவிட்டார்.