
ஆவடி, கோவில்பதாகையைச் சேர்ந்த பாலசுப்ரமணியன் என்பவரது மகன் சுகுமாரன் (15). இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் நேற்றிரவு ஆவடி மீனாட்சி திரையரங்கில் படம் பார்த்து விட்டு, கோவில்பதாகை, கலைஞர் நகர், இரண்டாவது தெரு வழியாக நடந்து சென்றுள்ளார்.
அப்போது, இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த அதே பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் (28), ஜெயராமன் (26), ஸ்டீபன் (23), தமிழரசன் (24) உட்பட 7 பேர் அந்த பள்ளி மாணவனை கத்தியைக் காட்டி மிரட்டியுள்ளனர். இவர்களில் ஸ்டீபன், மாணவனை கத்தியால் தாக்கியதில் காயம் ஏற்பட்டுள்ளது. பின் மாணவனை இருசக்கர வாகனத்தில் உட்கார வைத்து, கோவில்பதாகை ஏரிக்கு அவர்கள் அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கு, கடந்த 10 நாட்களுக்கு முன்பு நடந்த தகராறு தொடர்பாக, ஆட்களை அடையாளம் காட்டச் சொல்லி மாணவரை மிரட்டியுள்ளனர். இது தொடர்பாக மாணவனின் பெரியப்பா மகன் நவீன் ராஜ் அளித்த தகவலின் பேரில் ஸ்டீபன், ரஞ்சித் மற்றும் ஜெயராமன் ஆகிய மூவரையும் ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் கைது செய்தனர். மேலும், தப்பியோடிய நான்கு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.