நெல்லை: அடிதடி புகாரில் சிக்கிய 3 ஆயுதப்படை காவலர்கள் சஸ்பெண்ட்!
(நெல்லை எஸ்.பி. மணிவண்ணன்)
நெல்லையில் அடிதடி தகராறு புகாரில் சிக்கிய 3 ஆயுதப்படை காவலர்களை நெல்லை எஸ்.பி. மணிவண்ணன் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
பாளையங்கோட்டை பேருந்து நிலையம் அருகே கடந்த 15-ம் தேதி இரவு 9 மணி அளவில், நெல்லை மாவட்ட ஆயுதப்படையை சேர்ந்த 3 போலீசார் சாதாரண உடையில் ஒரு கடை முன்பு நின்றனர். அப்போது அங்கு வந்த பாளை புதுப்பேட்டை தெருவைச் சேர்ந்த சிலருக்கும் மூன்று போலீசாருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். அப்போது அங்கு வந்த சேவியர் காலனியைச் சேர்ந்த ஆல்பர்ட் என்பவர் இருதரப்பினரையும் விலக்கிவிட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த 3 போலீசாரும் கற்கள், கைகளால் ஆல்பர்ட்டை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து ஆல்பர்ட் பாளையங்கோட்டை காவல்நிலையத்தில் புகார் செய்தார்.
இதன்பேரில் எஸ்.ஐ. மகேஷ்குமார் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து மகேஷ் குமார் மற்றும் உளவுத்துறை போலீசார் நடத்திய விசாரணையில், அடிதடி சம்பவத்தில் ஈடுபட்டது மாவட்ட ஆயுதப்படையை சேர்ந்த சவுந்தர்ராஜன், அருண்பாண்டியன், ஜோதி பாண்டியன் என தெரியவந்தது.
இதுகுறித்த அறிக்கையை நெல்லை மாநகர போலீஸ் அதிகாரிகள் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மணிவண்ணனிடம் அளித்தனர். இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் ஆயுதப்படை காவலர்கள் மூவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.