“பாயும்புலி” படபாணியில் தொழிலதிபருக்கு கொலை மிரட்டல் ! சென்னையில் பரபரப்பு 

“பாயும்புலி” படபாணியில் தொழிலதிபருக்கு கொலை மிரட்டல் ! சென்னையில் பரபரப்பு 

“பாயும்புலி” படபாணியில் தொழிலதிபருக்கு கொலை மிரட்டல் ! சென்னையில் பரபரப்பு 
Published on

விஷால் நடித்த பாயும்புலி படபாணியில் சென்னை தொழிலதிபரிடம் ரூ.50 லட்சம் பணம் கேட்டு, தரவில்லை என்றால் மனைவி, குழந்தைகளை கடத்தி கொலை செய்துவிடுவதாக ரவுடி மிரட்டல். 

சென்னை ராயப்பேட்டை, பாலாஜி நகர் ஸ்ரீபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மக்பூல்பாஷா (37). பீட்டர்ஸ் சாலையில் கறிக்கோழி வியாபாரம் செய்து வரும் இவர் இன்று சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதனிடம் புகார் மனு அளித்தார். அதில் ‘‘எனது செல்போனுக்கு கடந்த 1ம் தேதி பேசிய நபர், தனக்கு உடனடியாக ரூ.10 லட்சம் வேண்டும். இல்லையென்றால் உங்கள் வீட்டில் உள்ளவர்களை கொலை செய்து விட்டு அதற்கு ஈடாக பத்து லட்சம் அனுப்புகிறேன் என்று கூறினார் என்றும் என் மீது போலீசில் புகார் அளித்தாலும் பயமில்லை, ஏன் என்றால் நான் ஏற்கனவே பத்து கொலைகள் செய்துள்ளேன். அடுத்து உன் வீட்டில் என்ன நடக்கும் என்று காட்டுகிறேன். பத்தோடு பதினொன்னாவது வழக்காக சிறைக்கு சென்று விட்டு வந்த பின்னர் உன் சாவு நிச்சயம்” என்று கூறியதாக அந்த புகார் மனுவில் குறிப்பிட்டு அவர் பாதுகாப்பு கேட்டிருந்தார்.

இந்த புகாரில் உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி கமிஷனர் விஸ்வநாதன் உத்தரவிட்டதன் பேரில் கூடுதல் போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா, இணைக்கமிஷனர் சுதாகர் ஆகியோர் மேற்பார்வையில் ராயப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது மக்பூல் பாஷாவை மிரட்டியது ரவுடி இம்ரான் என்றும் அவரை பற்றிய அதிர்ச்சித்தகவல்கள் வெளியாகின. சென்னை ஐஸ் ஹவுஸ் காங்கிரஸ் பிரமுகர் அப்பாஸ் கொலை வழக்கில் இம்ரான் முக்கிய குற்றவாளி. கொலை நடந்த மறுநாள் நாகை கோர்ட்டில் சரணடைந்தார். இம்ரான் மீது ராயப்பேட்டை, ஐஸ் அவுஸ், திருவல்லிக்கேணி உள்ளிட்ட காவல் நிலையங்களில் கொலை வழக்கு, கொலை முயற்சி, ஆட்கடத்தல் அடிதடி உள்பட 10க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு இதே போல இம்ரான் தொழிலதிபர் மக்பூல் பாஷாவை அவரது கோழிக்கடை அலுவலகத்துக்கு சென்று மிரட்டி கல்லாவில் இருந்த ரூ. 6 லட்சத்தை மிரட்டி பறித்துச் சென்றுள்ளார். இந்நிலையில் மீண்டும் மக்பூல் பாஷாவிடம் பணம் கேட்டு மிரட்டல் விடுத்துள்ளார். 

சென்னை மாதவரத்தில் கடந்த வாரம் ரவுடி வல்லரசு என்கவுன்டரில் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து ரவுடிகள் கொட்டம் முடிவுக்கு வரும் என்று பொதுமக்கள் திருப்தியாக இருந்தனர். ஆனால் மயிலாப்பூர் பகுதியில் ரவுடி இம்ரான் தொழிலதிபர்களை மிரட்டிப் பணம் பறிப்பது தொடர்பாக வந்த புகாரால் போலீசார் அதிருப்தியடைந்துள்ளனர். தொழிலதிபர் மக்பூல் பாஷா மட்டுமின்றி, ஐஸ் அவுஸ், டாக்டர் பெசன்ட் ரோட்டில் உள்ள பிரியாணி கடைகள், பெட்டிக்கடைகள், டீக்கடைகளில் இம்ரான் மிரட்டி மாதாமாதம் பணம் பறித்துள்ளதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. அவனைப் பிடிக்க இணைக்கமிஷனர் சுதாகர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. ரவுடி இம்ரான் பணம் கேட்டு மிரட்டும் ஆடியோவும் வெளியாகி உள்ளது. அதில் உருது மொழியில் ரவுடி பணம் கேட்டு மிரட்டி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஷால் நடிப்பில் வெளியான பாயும் புலி படத்திலும் தொழில்அதிபர்களை மிரட்டி பணம் பறிக்கும் கூலிப்படை போல இம்ரான் ராயப்பேட்டை தொழில்அதிபருக்கும் மிரட்டல் விடுத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com