திமுக எம்எல்ஏவிடம் பணம் கேட்டு மிரட்டல்: போலி அதிகாரியை தேடும் போலீஸ்..!
பல்லாவரம் திமுக சட்டமன்ற உறுப்பினருக்கு தொலைபேசி மூலம் லஞ்ச ஒழிப்புத்துறையினர் எனக் கூறி பணம் கேட்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
சென்னை பல்லாவரம் திமுகவின் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி. இவருக்கு நேற்றிரவு ஒரு நபர் தொலைபேசியில் தொடர்புக் கொண்டு தான் லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் பேசுவதாகவும், உங்கள் வீட்டிற்கு சோதனையிட வரவுள்ளதாகவும் தெரிவித்திருக்கிறார். மேலும் தனக்கு பணம் கொடுத்தால் சோதனைக்கு வரமாட்டேன் எனக் கூறிய அவர் பணத்தை குரோம்பேட்டையில் உள்ள அடையார் ஆனந்த பவன் உணவகத்தில் வந்து கொடுக்குமாறும் கூறியிருக்கிறார்.
அதற்கு சட்டமன்ற உறுப்பினர், பல்லாவரம் ரேடியல் சாலைக்கு வருமாறும் அங்குவைத்து பணம் தருவதாக கூறியிருக்கிறார். இதனையடுத்து இருசக்கர வாகனத்தில் வந்ந அந்த நபரிடம், பணம் கொடுக்க எம்எல்ஏ தரப்பு மறுத்திருக்கிறது. அதன்பின் அந்த நபர் தான் கொண்டுவந்த இருசக்கர வாகனத்தோடு அங்கிருந்து எஸ்கேப் ஆகிவிட்டார். லஞ்ச ஒழிப்பு போலீஸ் என மிரட்டல் விடுத்து பணம் கேட்டது தொடர்பாக பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி குரோம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரின் அடிப்படையில் மிரட்டல் விடுத்த நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
தகவல்கள்: சாந்தகுமார், செய்தியாளர்.