தூத்துக்குடி டூ இலங்கை: 500 கிலோ கஞ்சாவை கடத்த முயன்றதாக 4 பேர் கைது

தூத்துக்குடி டூ இலங்கை: 500 கிலோ கஞ்சாவை கடத்த முயன்றதாக 4 பேர் கைது
தூத்துக்குடி டூ இலங்கை: 500 கிலோ கஞ்சாவை கடத்த முயன்றதாக 4 பேர் கைது

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்துவதாக வந்த தகவலையடுத்து, தருவைகுளம் கடற்கரையில் 500 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்ய போலீசார் 4 பேரை கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடியை அடுத்துள்ள தருவைகுளம் மீன்பிடி கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்துவதாக மாவட்ட கியூ பிரிவு ஆய்வாளர் விஜய அனிதாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் ஆய்வாளர் விஜய அனிதா தலைமையிலான அதிகாரிகள் தருவைகுளம் கடற்கரை பகுதியில் நள்ளிரவில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது கடற்கரையில் இருந்து அரை மைல் தூரத்தில் கடலுக்குள் பெரில் என்ற படகு ஒன்று சந்தேகத்திற்கிடமான முறையில் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு இருப்பதை அதிகாரிகள் கவனித்தனர். இதையடுத்து உடனடியாக அந்த படகில் உள்ளவர்களை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர்கள் திரேஸ்புரம் பகுதியைச் சேர்ந்த அந்தோனி பிச்சை (41), லெனின்ஸ்டன் (48), ஜெயஸ்டன் (37), ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சி மடத்தைச் சேர்ந்த செல்வராஜ் (25) என்பது தெரியவந்தது.

மேலும் அவர்கள் சட்ட விரோதமாக தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்துவதற்காக படகில் 15 மூட்டைகளில் 500 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் 4 பேரையும் கைது செய்த க்யூ பிரிவு போலீசார் படகில் மறைத்து வைத்திருந்த 500 கிலோ கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட படகையும் பறிமுதல் செய்தனர்.

இந்நிலையில், பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மொத்த மதிப்பு சர்வதேச அளவில் 26 கோடி இருக்கும் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து உடனடியாக தேசிய புலனாய்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் தேசிய புலனாய்வு அதிகாரிகள், கஞ்சா கடத்தலில் கைது செய்யப்பட்டவர்களிடம் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். தூத்துக்குடியில் 500 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com