”வேறு சமூகத்தை சேர்ந்த உனக்காக, என்னை நிராகரிப்பதா?”- தூத்துக்குடியில் இளைஞர் படுகொலை

”வேறு சமூகத்தை சேர்ந்த உனக்காக, என்னை நிராகரிப்பதா?”- தூத்துக்குடியில் இளைஞர் படுகொலை
”வேறு சமூகத்தை சேர்ந்த உனக்காக, என்னை நிராகரிப்பதா?”- தூத்துக்குடியில் இளைஞர் படுகொலை

கோவில்பட்டி அருகே டிவி மெக்கானிக்காக பணிபுரிந்து வந்த ஒருவர் தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இறந்த நபரின் மனைவியை ஒருதலையாக காதலித்து வந்த நபரொருவர், இவர்மீது கோபப்பட்டு இவரை கொலை செய்ததாக சொல்லப்படுகிறது. கொலை நடந்த 4 மணிநேரத்தில் குற்றவாளியை காவல் துறையினர் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள குமாரகிரிபுதூர் கிராமத்தினை சேர்ந்த சுப்புராஜ் என்பவரது மகன் சூரிய ராகவன் (வயது 31). இவர் எட்டயபுரத்தில் அரசு மருத்துவமனை அருகே உள்ள உறவினருக்கு சொந்தமான டிவி பழுதுபார்க்கும் கடையில் பணிபுரிந்து வருகிறார். நேற்று காலையில் வழக்கம் போல சூரிய ராகவன் கடையில் வேலை பார்த்து கொண்டு இருந்தபோது, திடீரென கடைக்கு வந்த மர்ம நபர் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின் தான் கொண்டு வந்த கத்தியால் சூரிய ராகவன் தலையை துண்டித்து கொலை செய்து விட்டு தப்பியோடிவிட்டார்.

இது குறித்த தகவல் கிடைத்ததும் எட்டயபுரம் போலீசார் விரைந்து சென்று சூரிய ராகவன் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவ இடத்திற்கு தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார், விளாத்திகுளம் டி.எஸ்.பி. பிரகாஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்தினை பார்வையிட்டு போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் சூரிய ராகவனை கொலை செய்து விட்டு தப்பியோடியது சோழபுரத்தினை சேர்ந்த கண்ணன் என்பவரது மகன் ஆனந்தராஜ் (வயது 22) என்பது தெரியவந்தது. சூரிய ராகவனை கொலை செய்த சோழபுரத்தினை சேர்ந்த ஆனந்தராஜ், கேட்டரிங் முடித்து விட்டு விழாக்களுக்கு சமையல் செய்வது, கோயில் திருவிழாக்களில் ஆடு வெட்டுவது போன்ற பணிகளை செய்து வந்துள்ளார்.

படுகொலை செய்யப்பட்ட சூரிய ராகவனுக்கும், படர்ந்தபுளி கிராமத்தினை சேர்ந்த மகாலெட்சுமிக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டுள்ளது. பட்டதாரியான மகாலெட்சுமி, சூரிய ராகவன் கடையின் அருகேயுள்ள டைப்பிஸ்ட் இன்ஸ்டிட்யூட்டிற்கு வந்தபோது பழக்கம் ஏற்பட்டு, பின்னர் அது காதலாக மாறியுள்ளது. இந்த காதல் விவாகரம் இரு வீட்டருக்கும் தெரிய வந்த நிலையில் இருவரும் வெவ்வேறு சமூகத்தினை சேர்ந்தவர்கள் என எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இதற்கிடையில் பெற்றோர்களின் எதிர்ப்பினையும் மீறி சூரிய ராகவன், மகாலெட்சுமி இருவரும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டுள்ளனர். சூரிய ராகவன், மகாலெட்சுமியை காதலிக்கும்போது, ஆனந்தராஜ்வும் மகாலெட்சுமியை காதலித்துள்ளார். ஆனால் மகாலெட்சுமி தான் சூரிய ராகவனை காதலிப்பதாக தெரிவித்துள்ளார்.

இதனால் ஒரே சமூகத்தினை சேர்ந்த தன்னை காதலிக்கமால் மற்றொரு சமூகத்தினை சேர்ந்த சூரிய ராகவனை மகாலெட்சுமி எப்படி காதலிக்கலாம் என ஆனந்த்ராஜ்க்கு மகாலெட்சுமி மற்றும் சூரிய ராகவன் மேல் ஆத்திரம் எழுந்ததாக கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில் சூரிய ராகவன் மற்றும் மகாலெட்சுமி இருவரும் திருமணம் செய்து கொண்டது ஆனந்தராஜ்க்கும் மேலும் ஆத்திரத்தினை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தான் காதலித்த பெண்ணை திருமணம் செய்த சூரிய ராகவனை கொலை செய்ய வேண்டும் என்று ஆனந்தராஜ் திட்டம் தீட்டியுள்ளார்.

அதன்படி பழுதான எல்.இ.டி டிவி ஒன்றை பழுது பார்க்க, சூரிய ராகவன் வேலை பார்த்த கடையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ஆனந்த்ராஜ் கொடுத்துள்ளார். பின் தினமும் சூரிய ராகவனுக்கு ஃபோன் செய்த ஆனந்த்ராஜ், அவரிடம் “டிவி வேலை பார்த்தாச்சா?” என்று கேட்பதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார். நேற்று முன்தினம் கேட்ட போது, “நாளை டிவி ரெடியாகிவிடும். ஆகவே நாளை வந்து வாங்கிக் கொள்ளுங்கள்” என்று சூரிய ராகவன் தெரிவித்துள்ளார். இதையெடுத்து தான் திட்டமிட்ட படி ஆனந்தராஜ் ஒரு கட்டை பையில் தான் ஆடு வெட்ட கொண்டு செல்லும் கத்தி, மிளாகாய் பொடி ஆகியவற்றை கொண்டு சென்றுள்ளார்.

அங்கு டிவி வாங்குவதற்கு முன்பு, “நான் காதலித்த பெண்ணை நீ எப்படி திருமணம் செய்யலாம்?” என்று கூறிய ஆனந்தராஜ், சூரிய ராகவனிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளனர். வாக்கு வாதம் முற்றவே தான் கொண்டு வந்த மிளாகாய் பொடியை சூரிய ராகவன் முகத்தில் வீசி விட்டு கத்தியை கொண்டு தலையை துண்டித்த ஆன்ந்தராஜ், தலையை மட்டும் கையில் பிடித்தாவறு சுற்றி பார்த்து விட்டு பின் அதை அருகில் வீசி விட்டு தப்பிச் சென்றது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. எட்டயுபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய ஆனந்த்ராஜை கைது செய்து அவரிடம் இருந்து இரண்டு கத்திகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒரு தலைக்காதல் தான் காரணமா அல்லது வேறு எதுவும் காரணமா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

- மணிசங்கர் 

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com