தூத்துக்குடி | மண்ணில் தென்பட்ட ஒற்றை கை.. தோண்டி எடுக்கப்பட்ட மாயமான அண்ணன் - தம்பியின் சடலங்கள்!
செய்தியாளர் - ராஜன்கார்த்திகேயன்
தூத்துக்குடி தெர்மல் நகர் காவல்நிலையத்திற்கு இரவு நேரத்தில் அலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதில் பண்டுக்கரைப் பகுதியில் மனிதக் கை ஒன்று மட்டும் நிலத்திற்கு மேல் தெரிகிறது என்று தெரிவிக்கப்படவே உடனடியாக அப்பகுதிக்கு விரைந்தபோது உடல் ஒன்று புதைக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
உடனடியாக அந்த உடலைத் தோண்டியபோது அருகிலேயே வேறு ஒரு உடலும் புதைக்கப்பட்டிருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர். பின்னர் இரண்டு உடல்களையும் வருவாய்த்துறை அதிகாரிகள் முன்பு வைத்து தோண்டி எடுத்தபோதுதான் அதே பகுதியைச் சேர்ந்த அருள்ராஜ் மற்றும் மாரிப்பாண்டியின் உடல்கள் என்பது தெரியவந்துள்ளது.
இருவரும் அண்ணன் தம்பிகள் என்பதை அறிந்த கவல்துறையினர் இது தொடர்பாக விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
நடந்தது என்ன?
தூத்துக்குடி மாவட்டம், தெர்மல் நகர் அருகே உள்ள கோயில் பிள்ளைநகரை அடுத்த பண்டுகரை பகுதியைச் சேர்ந்தவர் சின்னத்துரை. இவருக்கு ஆண், பெண் என ஆறு பிள்ளைகள் இருக்கின்றனர். அதில் ஜூலை கடைசி வாரத்தில் 5வது மகனான அருள்ராஜ் திடீரென மாயமாகியுள்ளார். ஆனால் அவரை எங்கு தேடியும் கிடைக்காத நிலையில் இரண்டே நாட்களில் அவரது அண்ணன் மாரிப்பாண்டியும் மாயமாகியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளது. ஆனால் காவல்துறை தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படிகிறது.
இந்த நிலையில்தான் உடல் தோண்டி எடுக்கப்பட்டதைத் தொடர்ந்து காவல்துறையினர் விசாரணையில் இறங்கியுள்ளனர். அதில் சமீபத்தில் ஏதாவது ஏற்பட்டதா என அவர்களின் குடும்பத்தினரிடம் விசாரணை செய்ததில் ஜூலை கடைசி வாரத்தில் ஒருநாள் அதே ஊரைச் சேர்ந்த ரிதன் என்னும் 24 வயது இளைஞர் இரவில் குடித்துவிட்டு மதுபோதையில் தனது நண்பர்களுடன் சேர்ந்து சின்னதுரையின் வீட்டின் கதவைத் தட்டி தகராறு செய்தபோது காளிராஜன் அதைக் தட்டிக்கேட்டதாகக் கூறியுள்ளனர். இதனால் அவரைப் பிடித்து விசாரித்தபோது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளனர்.
ரிதனின் வாக்குமூலத்தின்படி 26ந் தேதி காலையில் அருள்ராஜ் வீட்டருகே அதே பகுதியை சேர்ந்த ரீதன், முனீஸ்வரன், வில்வராஜ் மற்றும் காதர் மீரான் பகுதியைச் சேர்ந்த சங்கர் ஆகியோர் கஞ்சா மற்றும் மது அருந்தியுள்ளனர். அப்போது ஏற்பட்ட தகராறில் அருள்ராஜ் வீட்டு கதவை தட்டினோம். இதை தொடர்ந்து, அருள்ராஜ் மற்றும் அவரது சகோதரி மாரியம்மாள் தட்டி கேட்டனர். அந்த ஆத்திரத்தில் கொலை செய்தோம்.
அதுமட்டுமல்ல, எனது சகோதரன் கடந்த சில வருடங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டான். அதற்கு மிக முக்கிய காரணம் அருள்ராஜ் சகோதரன் மாரிபாண்டி, ஆகவே அவரையும் கொலை செய்தோம் என்று ரிதன் வாக்குமூலம் அளித்துள்ளார். ஜூலை 26ம் தேதி அருள்ராஜை ரிதன் தனது நண்பர்களுடன் சேர்ந்து வெட்டிக்கொலை செய்து புதைத்துவிட்டு இரண்டு நாட்களிலேயே அருள்ராஜைத் தேடி அலைந்த மாரிபாண்டியையும் கொன்று அவரது சகோதரரைப் புதைத்த அதே இடத்திற்கு அருகிலேயே புதைத்து வைத்திருந்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் ரிதனைக் கைது செய்து தொடர்ச்சியாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.