தூத்துக்குடி | ரகசிய தகவலை அடுத்து அதிரடி சோதனை – 24 கிலோ கஞ்சா பறிமுதல் 6 பேர் கைது
செய்தியாளர்: மணிசங்கர்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அடுத்த மூப்பன்பட்டி பகுதியில் கஞ்சாவை பதுக்கி வைத்து சொகுசு கார்களில் கைமாற்றப்படுவதாக டி.எஸ்.பி. ஜெகநாதனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் ஜின்னா பீர் முகம்மது, உதவி ஆய்வாளர் செந்தில் வேல்முருகன், தனிப்பிரிவு காவலர்கள் முத்துராமலிங்கம், அருணாச்சலம், செஸ்லின் வினோத், கழுகாசல மூர்த்தி மற்றும் போலீசார் கோவில்பட்டி மூப்பன்பட்டி பகுதியில் முகாமிட்டு ரகசியமாக கண்காணித்து வந்தனர்.
இதையடுத்து நேற்று மாலை மூப்பன்பட்டி சுடுகாடு அருகே போலீசாரை பார்த்ததும் சிலர் காரில் இருந்து இறங்கி ஓடினர். போலீசார் துரத்திச் சென்று அவர்களை சுற்றி வளைத்துப் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அவர்கள் கோவில்பட்டி வள்ளுவர் நகரை சேர்ந்த அருண்குமார் (23), நாகலாபுரத்தைச் சேர்ந்த கொம்பையா (21), வ.உ.சி. நகரை சேர்ந்த கார்த்திக் (20) கயத்தாறு தெற்கு கோனார்கோட்டையைச் சேர்ந்த மகாராஜா (18) என்பது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து பதுக்கி வைக்கப்பட்டிருந்த 23 கிலோ 720 கிராம் பதப்படுத்தப்பட்ட உயர் ரக கஞ்சா ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார், 4 பேரையும் கைது செய்தனர். தனிப் பிரிவு போலீசார் திறம்பட செயல்பட்டு அடுத்தடுத்து கஞ்சா விற்பனை செய்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் கோவில்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.