நண்பர்களால் கொல்லப்பட்டவர் உடல்: வட்டாட்சியர் முன் தோண்டி எடுப்பு
திருவொற்றியூரில் நண்பர்களால் கடத்தி கொலை செய்யப்பட்ட இளைஞரின் உடல் வட்டாட்சியர் முன் தோண்டி எடுக்கப்பட்டது.
சென்னையை அடுத்த திருவொற்றியூர் ஜோதி நகரைச் சேர்ந்தவர் அவினாஷ் பூஷன். இவர் கடந்த 7ஆம் தேதி தமது நண்பர்களால் கடத்தப்பட்டார். அவரிடம் ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டிய நண்பர்கள், பணம் தருவதில் சிக்கல் ஏற்படவே அவினாஷைக் கொன்றுவிட்டனர். இந்நிலையில் போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், அவிஹாஷ் நண்பர்களால் கொலை செய்யப்பட்டது கண்டறியப்பட்டது.
பின்னர் அவினாஷின் நண்பர்கள் வெங்கேடசன், ரமேஷ் ஆகியோர் அளித்த வாக்கு மூலத்தில், சடையங்குப்பம் பர்மா நகர் சுண்ணாம்பு கால்வாயில் அவரது உடலை புதைத்துள்ளது தெரியவந்தது. இதனையடுத்து 6 பேரை கைது செய்த போலீஸார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் திருவொற்றியூர் வட்டாட்சியர் செந்தில் நாதன் தலைமையில், ஸ்டான்லி அரசு மருத்துவர்கள் உதவியோடு அவினாஷ் பூஷனின் சடலத்தை காவல்துறையினர் தோண்டி எடுத்தனர். இதைத்தொடர்ந்து அங்கேயே உடற்கூறு ஆய்வும் செய்யப்பட்டது.