கூத்தாநல்லூர்: திமுக அலுவலகத்திற்குள் வாளோடு சென்று மிரட்டிய திமுக கவுன்சிலரின் கணவர் கைது!
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் தாலுகா 17-வது வார்டு திமுக நகர்மன்ற உறுப்பினர் பிரவீனாவின் கணவர், முத்துகிருஷ்ணன். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக கூத்தாநல்லூர் நகர திமுக வாட்ஸ் அப் குருப்பில் உள்ள 21-வது வார்டு திமுக உறுப்பினரின் சகோதரர் அனஸ் மைதீன், 23-வது திமுக வார்டு உறுப்பினர் காதர் மற்றும் 11-வது வார்டு திமுக செயலர் கண்ணன் உள்ளிட்ட சில திமுக பிரமுகர்களை அநாகரிகமாக பேசியுள்ளார்.
இதுகுறித்து திமுக பிரமுகர் அனஸ் மைதீன் மற்றும் கண்ணன் ஆகியோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் முத்துகிருஷ்ணன் மீது கூத்தாநல்லூர் காவல் நிலையத்தில் இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் திமுக அலுவலகம் அமைந்துள்ள இடத்திற்கு வாளோடு சென்ற முத்துகிருஷ்ணன், அங்குள்ள திமுக பிரமுகர்களை தரக்குறைவாக பேசியுள்ளார். அது மட்டுமல்லாமல் அதே வாளோடு கூத்தாநல்லூர் நகராட்சி அலுவலகத்திற்குச் சென்று அங்கும் பிரச்னை செய்துள்ளார்.
இதையடுத்து கூத்தாநல்லூர் நகராட்சி ஆணையர், முத்துகிருஷ்ணன் மீது கொடுத்த புகாரின் அடிப்படையில் கூத்தாநல்லூர் காவல் நிலைய போலீசார், அவர் மீது வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இது குறித்து திமுக பிரமுகர் அனஸ் மைதீனிடம் கேட்டபோது, “கூத்தாநல்லூர் நகர செயலாளர் பக்கிரிசாமி சரிவர செயல்படவில்லை. ஏனெனில் முத்துகிருஷ்ணன்பற்றி அவரிடம் நாங்கள் ஏற்கெனவே புகார் கொடுத்தோம். அப்போதே அவர் கட்சி ரீதியாக நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த வாளோடு வலம் வந்த சம்பவம் நிகழ்ந்திருக்காது” என தெரிவித்தார்.
இந்நிலையில் முத்துகிருஷ்ணன், நகராட்சி அலுவலக வாசலில் திமுக பிரமுகரை வசைபாடியது, திமுக அலுவலகத்திற்குள் வாளோடு சென்று “நான் நான்கு கொலைகள் செய்தவன்” என வாக்குவாதம் செய்து அங்கிருந்த திமுக பிரமுகர்களை மிரட்டியது, கூத்தாநல்லூர் நகராட்சி அலுவலகத்திற்குள் ஆயுதத்தோடு சென்றது உள்ளிட்ட காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.