சோழவரம் அருகே பலகோடி மதிப்புள்ள 20 டன் குட்கா சிக்கியது
சோழவரம் அருகே லாரியில் கடத்தி வரப்பட்ட பல கோடி ரூபாய் மதிப்பிலான 20 டன் குட்கா பொருட்கள் பிடிபட்டன. ஒரு லாரியில் இருந்து மாற்றொரு வாகனத்திற்கு மாற்றும் போது பொது மக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்துள்ளனர்.
சோழவரம் அருகே சிறுணியம் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் ஒரு லாரியில் இருந்து மற்றொரு வாகனத்திற்கு சந்தேகத்திற்கு இடமான பண்டல்களை மாற்றுவதை கண்ட பொதுமக்கள் சோழவரம் போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் லாரியை சோதனை செய்த போது அதில் தடை செய்யப்பட்ட குட்கா, மாவா உள்ளிட்ட போதை பொருட்கள் இருப்பது தெரியவந்தது. மூன்று வாகனங்களுடன் அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட குட்கா பொருட்களின் மதிப்பு பல கோடி ரூபாய் எனவும், 20 டன் எடை கொண்ட குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது எனவும் போலீசார் தெரிவித்தனர்.
திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணையில் ஈடுபட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோதமான சந்தேகத்திற்கிடமான சம்பவங்கள் குறித்து பொதுமக்கள் மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுக்கலாம் எனவும், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் வழக்கில் மாவட்டத்தில் நான்கு பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்தார்.