நினைத்ததை விட அளவுக்கு அதிகமான பணம் - திருடிச் சென்றவருக்கு மகிழ்ச்சியில் மாரடைப்பு!
உத்தரபிரதேசத்தில் திருடச்சென்ற இடத்தில் அளவுக்கு அதிகமான பணம் கிடைத்த மகிழ்ச்சியில் திருடச்சென்ற நபருக்கு மாரடைப்பு ஏற்பட்டு திருடிய பணத்தின் பெரும்பகுதியை மருத்துச்செலவுக்கே பயன்படுத்திய சோக சம்பவம் நடந்தேறியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி 16 மற்றும் 17 தேதிகளில் கோத்வாலி தேஹாத் பகுதியில் நவாப் ஹைதர் என்பவர் நடத்திவரும் பொது சேவை மையத்தில் சுமார் ரூ.7 லட்சம் திருட்டு போயிருப்பதாக அவர் புகார் அளித்திருந்தார்.
அந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீஸார், நுஷாத் என்ற நபரை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியதில் அவரும், அஜாஜ் என்ற மற்றொரு நபரும் சேர்ந்து திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.
மேலும் நுஷாத்திடம் நடத்திய விசாரணையின்போது, ’’நாங்கள் இருவரும் பொதுசேவை மையத்தில் சில ஆயிரங்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் திருடச்சென்ற போது, எங்களுக்கு 7 லட்சம் கிடைத்ததால் அதீத மகிழ்ச்சியடைந்தோம். இருவரும் பணத்தை பங்கிட்டபோது, மகிழ்ச்சியில் அஜாஜிற்கு மாரடைப்பு ஏற்பட்டது. அதனால் கொள்ளையடித்த பணத்தில் பெரும்பகுதி அறுவைசிகிச்சைக்கே சென்றுவிட்டது. என்னிடமிருந்த பணத்தை டெல்லிக்குக் கொண்டுசென்று சூதாட்டத்தில் பயன்படுத்தினேன்’’ என்று கூறியிருக்கிறார்.
அவரிடமிருந்து ரூ.3.7 லட்சம் ரொக்கம் மற்றும் இரண்டு துப்பாக்கிகளை கைப்பற்றிய போலீஸார், ஏற்கெனவே இருவர்மீதும் பல திருட்டு வழக்குகள் இருந்ததையும் விசாரணையில் கண்டறிந்தனர். மேலும் அவர்களிடமிருந்து திருடப்பட்ட ஒரு பைக்கையும் போலீஸார் கைப்பற்றினர். இந்த சிக்கலான வழக்கில் குற்றவாளிகளைக் கண்டறிந்த போலீஸாருக்கு காவல்துறை சார்பாக ரூ.5000 பரிசாக வழங்கப்பட்டுள்ளது.