தேனி: வாகன சோதனையில் சிக்கிய 12 கிலோ கஞ்சா – சிறுவன் உட்பட இருவர் கைது
தேவாரம் அருகே கஞ்சா கடத்திய சிறுவன் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் தேவாரம் அருகே சமத்துவபுரம் கிராமப் பகுதியில் சமீப காலமாக கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாக தனிப்பிரிவு காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தகவலின் பேரில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வேகமாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர்.
அப்போது இருசக்கர வாகனத்தில் இருந்த சாக்கு பையில் கஞ்சா பதுக்கி வைத்து கடத்தியது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்தது தேவாரம் செல்லாயிபுரத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன் என தெரியவந்தது.
மேலும் சமத்துவபுரத்தைச் சேர்ந்த தனலட்சுமி (40) என்பவர் தென்னந்தோப்பில் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்ததும், அவரது மகள் ஜோதிலட்சுமி என்பவரிடம் கஞ்சாவை ஒப்படைக்க கொடுத்து விட்டதாக சிறுவன் காவல் துறையினரிடம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த தேவாரம் காவல்துறையினர், கஞ்சா கடத்திய சிறுவனை கைது செய்து மதுரை அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர். மேலும் கஞ்சாவை கொடுத்தனுப்பிய தனலட்சுமியை கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர்களிடமிருந்து சுமார் 12 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.