தேனி | பஞ்சு வியாபாரி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் - தலைமறைவாக இருந்த இருவர் கைது
செய்தியாளர்: மலைச்சாமி
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகாவிற்கு உட்பட்ட வருசநாடு கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (37). இவர், அதே பகுதியில் இலவம் பஞ்சு வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில், கடந்த 11 ஆம் தேதி இரவு தனது வீட்டின் முன்பு நடந்து சென்ற சதீஷ்குமாரை வழிமறித்த கும்பல், அவர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளனர்.
இதையடுத்து அலறித் துடித்த சதீஷ்குமாரை மீட்ட அக்கம் பக்கத்தினர் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர்.
இதையடுத்து மேல் சிகிச்சைகாக மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து சதீஷ்குமார் கொடுத்த தகவலின்படி வழக்குப் பதிவு செய்த வருசநாடு காவல்துறையினர் குற்றவாளிகளை தேடி வந்தனர்.
இதைத் தொடர்ந்து தலைமறைவாக இருந்த வருசநாடு கிராமத்தைச் சேர்ந்த மலைச்சாமி மற்றும் சிங்கராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்த குமார் ஆகிய இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர் மேலும் இந்த வழக்கில் யாருக்கும் தொடர்பு இருக்கிறதா என தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காவல் துறையினரின் முதற்கட்ட விசாரணையில் தொழிற்போட்டி காரணமாகவே இந்த சம்பவம் நடைபெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் அ;திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.