மனைவியை கொன்றுவிட்டு 5 நாட்கள் உல்லாசமாக சுற்றிய கணவர்.. தேனியில் அதிர்ச்சி சம்பவம்
தேனியில் மனைவியை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த கணவர், 5 நாட்களாக வெளியே உல்லாசமாக சுற்றி வந்தது தெரியவந்தது.
தேனிமாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா வருசநாடு அருகே உள்ள தனிபாறை கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கணேசன் (58), அம்சகொடி (50) தம்பதியினர். கணேசன் தினமும் குடித்துவிட்டு மனைவியுடன் தகராறு செய்வது வழக்கம். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு குடிபோதையில் வீட்டுக்கு வந்த கணேசன் தனது மனைவி அம்சகொடியுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு கையில் கிடைத்ததைக் கொண்டு அடித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து ஒரு கட்டத்தில் போதையின் உச்சத்திற்குச் சென்ற கணேசன் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து அம்சகொடியை சராமாரியாக வெட்டியதாக தெரிகிறது. இதில் அம்சகொடி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த கணேசன், வெளியில் யாருக்கும் தெரியாதபடி வீட்டை பூட்டிவிட்டு இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள குமனந்தொழு கிராமத்திற்குச் சென்று மதுபானங்களை வாங்கி குடித்துக் கொண்டும் உணவுவிடுதியில் உணவை வாங்கி சாப்பிட்டுக் கொண்டும் கடந்த 5 நாட்களாக காலத்தை கடத்தி வந்துள்ளார் .
இந்நிலையில், 5 நாட்களுக்குப் பிறகு வீட்டிற்கு வந்த கணேசன் அம்சகொடியின் அழுகிய உடலை இழுத்துச் சென்று வீட்டின் வெளியே இருந்த கோழிக் கூண்டில் அடைத்து வைத்தார். இதையடுத்து அழுகிய உடலில் இருந்து கடுமையான துர்நாற்றம் வீசியதால் அக்கம்பக்கத்தினர் கடமலைக்குண்டு காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.
துகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கடமலைக்குண்டு காவல் துறையினர் கோழிக் கூண்டில் அழுகிய நிலையில் இருந்த அம்சகொடியின் உடலை மீட்டனர் இதைத் தொடர்ந்து, குடிபோதையில் சுற்றிக் கொண்டிருந்த கணேசனை கைது செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

