தேனி: பள்ளி மாணவியை காதல் திருமணம் செய்த கொத்தனார் போக்சோவில் கைது
உத்தமபாளையம் அருகே பள்ளி மாணவியை காதல் திருமணம் செய்த கொத்தனார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள க.புதுப்பட்டியைச் சேர்ந்த பள்ளி மாணவியை கடந்த 23ஆம் தேதி முதல் காணவில்லை என அவரது பெற்றோர் உத்தமபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் மாணவியை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில், அந்த மாணவியை சின்னமனூரில் மீட்ட காவல் துறையினரின் விசாரணை மேற்கொண்டனர். இதில், அனுமந்தன்பட்டி சர்ச் தெருவைச் சேர்ந்த கொத்தனார் வேலை செய்யும் கௌதம் (22) என்ற இளைஞர் பள்ளி மாணவியை காதலித்து வந்ததும், கடந்த சில தினங்களுக்கு முன்பு அதே பகுதியில் உள்ள கோயிலில் அவரை திருமணம் செய்து சின்னமனூரில் உள்ள உறவினர் வீட்டில் தங்க வைத்திருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து கௌதம் மீது போக்சோ வழக்குப் பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.