`உங்களுடையது அண்ணன் தங்கை உறவுமுறை’- பெற்றோர் வார்த்தைகளால் தற்கொலைக்கு முயன்ற காதலர்கள்
தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் காதலித்து வந்த இருவர், அண்ணன் - தங்கை உறவுமுறையின் கீழ் வருபவர்கள் என்பதால் அவர்கள் திருமணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் மனமுடைந்து, காதலித்து வந்த இருவரும் விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுப்பட்டுள்ளனர். அதன் விளைவாக சம்பந்தப்பட்ட பெண் உயிரிழந்திருக்கிறார். அந்த ஆண், உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பெரியகுளத்தில் வடகரை பட்டாப்புளி தெருவைச் சேர்ந்த மணி என்பவரது மகன் பெரியசாமி (வயது 20). இவர் கூலி வேலை செய்து வரும் நிலையில், அதே பகுதியை சேர்ந்த நல்லயன் என்பவரது மகள் வித்தியா (வயது 19) முதலாமாண்டு கல்லூரியில் படித்து வரும் நிலையில் இருவரும் காதலித்துள்ளனர். இருவரும் காதலிக்கும் விவரம் இரு வீட்டு பெற்றோரும் தெரிய வந்த நிலையில், இருவரும் அண்ணன் தங்கை உறவு முறை வருவதாகக்கூறி இரு வீட்டு பெற்றோரும் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த இருவரும் நேற்று இரவு வீட்டை விட்டு வெளியேறி, பெரியகுளம் அருகே உள்ள தனியார் கல்லூரி பின்புறம் உள்ள தோட்டத்தில் இருவரும் விஷம் குடித்து தற்கொலை முயற்சி செய்துள்ளனர். விஷம் குடித்ததில் வித்தியா உயிரிழந்திருக்கிறார். பெரியசாமி மயக்கமடைந்துள்ளார். இருவரையும் அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
வித்தியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த காவல்துறையினர், இருவரின் தற்கொலை குறித்தும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் தேனியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.