நண்பனிடமே பணத்தை கொள்ளையடித்து நாடகமாடிய இளைஞர்
சிகிச்சைக்கு பணம் தராததால் கூலிப்படையை ஏவி நண்பனிடமே கொள்ளையடித்ததாக இளைஞர் ஒருவர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்தவர் ஜாபர் சாதிக். இவர் ரிச்சி தெருவில் செல்ஃபோன் கடை நடத்தி வருகிறார். இவர் கடந்த 25 ஆம் தேதி நண்பர் தமீம் அன்சாரியுடன் விமான நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்தபோது, நந்தனம் அருகே அவர்களை கொள்ளை கும்பல் ஒன்று வழிமறித்தது. ஜாபர் சாதிக்கை கடுமையாக தாக்கிய கொள்ளையர்கள், அவர் வைத்திருந்த 4 லட்சம் ரூபாய் பணத்தை திருடிச் சென்றனர்.
இதையடுத்து நடைபெற்ற விசாரணையில், சம்பவத்தின்போது, பணம் பறிக்க வந்த கொள்ளையர்கள் தமீம் அன்சாரி மீது மட்டும் தாக்குதல் நடத்தாமல் சென்றது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. சந்தேகத்தின்பேரில் நடைபெற்ற விசாரணையில், தமீம் அன்சாரியே, தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து இந்தக் கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றி இருப்பது தெரியவந்தது.
தமீம் அன்சாரி கொடுத்த வாக்குமூலத்தில், காவல்துறையினருக்கு பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன. தொழில் தொடர்பாக கூட்டுச் சேர்ந்த இருவரும் வெளிநாடுகளுக்குச் சென்று பொருட்கள் வாங்கி வரும் குருவியாக செயல்பட்டுள்ளனர்.
பாங்காக், தாய்லாந்து போன்ற நாடுகளுக்கு செல்லும் அவர்கள், பொருட்களை வாங்கி வருவதைப் போல் அங்கு தங்கத்தை வாங்கி திரைப்பட பாணியில் உடலுக்குள் மறைத்து வைத்து கடத்தி வந்ததும் தெரியவந்திருக்கிறது. இதே முறையில் தொடர்ந்து கடத்தலில் ஈடுபட்டதால் தமீம் அன்சாரிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
மருத்துவ சிகிச்சைக்கு ஜாஃபர் பணம் தராததால் ஆத்திரமடைந்த தமீம், கூட்டளிகளுடன் சேர்ந்து பணத்தை கொள்ளையடித்ததாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
கொள்ளைச் சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த மனோகரன், அருண் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், கொள்ளையடிக்கப்பட்ட 4 லட்சம் ரூபாய் ஹவாலா பணமாக இருக்கலாம் எனக் காவல்துறையினர் சந்தேகிப்பதாக கூறப்படுகிறது.
இச்சம்பவத்தில் ஹவாலா மோசடி, தங்கம் கடத்தல், சட்டவிரோத பண பரிமாற்றம் என பல குற்ற சம்பவங்களுக்கு தொடர்பு இருப்பதால், இதுகுறித்த விவரங்கள், ரிசர்வ் வங்கி அதிகாரிகளுக்கும் அமலாக்கத்துறைக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

