காதலிக்க மறுத்த மாணவியை கத்தியால் குத்திய இளைஞர்
ஆரணி அடுத்த படவேடு அருகே உள்ள தேவனாங்குளம் கிராமத்தை சேர்ந்த ஞானசேகரன் என்பவரின் மகள் தீபிகா. இவர் படவேடு அருகில் உள்ள ரேணுகொண்டாபுரத்தில் அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். இந்நிலையில், சக மாணவிகளுடன் நேற்று சைக்கிளில் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தார் தீபிகா. படவேடு கமண்டலநதி அருகில் சென்று கொண்டிருந்த போது, படவேடு மங்ளாபுரம் கிராமத்தை சேர்ந்த பசுபதி என்பவர், தீபிகாவை கத்தியால் முதுகில் குத்தியுள்ளார். உடன் வந்த மாணவிகள் அலறியடித்து ஓடினார்கள். படுகாயம் அடைந்த தீபிகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பொதுமக்கள் பசுபதியை பிடித்து சந்தவாசல் காவல்நிலையத்தில் ஓப்படைத்தனர். பின்னர் பசுபதியை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதனையடுத்து, காவல்துறை விசாரணையில் பசுபதி, தீபிகாவை கடந்த ஒரு மாத காலமாக தினமும் பின்தொடர்ந்து காதலிப்பதாகக் கூறி டார்ச்சர் செய்துள்ளார். இந்நிலையில் பள்ளிக்குச் சென்ற தீபிகாவை மடக்கி தன்னை காதலிக்க வேண்டும், இல்லை என்றால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டி உள்ளார். தீபிகா மறுத்ததால் ஆத்திரமடைந்த பசுபதி, மறைத்து வைத்திருந்த கத்தியால் அவர் முதுகில் குத்தியுள்ளார். இதில் தீபிகா படுகாயம் அடைந்தார். காதலிக்க மறுத்த காரணத்தால் பள்ளி மாணவியை வாலிபர் கத்தியால் குத்திய சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தகவல்கள் : S. இரவி, செய்தியாளர் -ஆரணி