காதலன் கல்யாணத்திற்கு மறுத்ததால் இளம்பெண் தற்கொலை
மும்பையில் பெண் ஒருவர் தனது காதலன் கல்யாணத்திற்கு மறுத்ததால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மும்பை தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருபவர், அனுகுஷ் உஜ்ஜல். இவரின் ஒரே மகள் பிரதிக்ஷா கடந்த வாரம் அவருடைய அறையில் தூக்கிலிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த சக்கி நாகா பகுதி காவல்துறையினர், பெண்ணின் தற்கொலை குறித்து காரணம் தெரியாமல் குழம்பி வந்தனர். பிரதிக்ஷாவின் தோழிகள் மற்றும் உடன் பணிபுரிபவர்கள் என அனைவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில் பிரதிக்ஷாவின் பெற்றோர்கள் அவர்களின் மகளின் அறையை சுத்தம் செய்தபோது கடிதம் ஒன்று சிக்கியுள்ளது.
இந்த கடிதத்தில், அந்த பெண் தன்னை அதே பகுதியை சேர்ந்த ஒருவரைப் பல வருடங்களாக காதலித்து வந்ததாகவும், அவர் தன்னை திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்து, ஏமாற்றி விட்டதாகவும் கூறியுள்ளார். மேலும் ஜாதி காரணத்தை குறிப்பிட்டு அந்த நபரின் தாய் தன்னை மருமகளாக ஏற்றுக்கொள்ள மறுத்ததாகவும், அவரின் தூண்டுதலால் காதலன் தன்னை கைவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதனால்தான் மனமுடைந்து தற்கொலை செய்து கொள்வதாக பிரதிக்ஷா கடிதத்தில் எழுதியுள்ளார். இந்தக் கடிதத்தை கண்ட அவரின் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்து, அதனை காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளனர். மேலும், இன்று வரை தனது மகள் காதலித்த விஷயம் கூட தங்களுக்கு தெரியாது என்றும், தனது மகளின் மரணத்திற்கு காரணமாக இருந்த காதலன் மற்றும் அவரின் தாயாரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.