'சிபிஐ விசாரணைக்கு மாற்ற முடியாது' - சிறுமி வன்கொடுமை வழக்கில் உச்சநீதிமன்றம் திட்டவட்டம்
அயனாவரம் அடுக்குமாடி குடியிருப்பில் சிறுமி வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற முடியாது என உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 14 பேர் சார்பில் தொடரப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
அயனாவரத்தில் சிறுமி பாலியல் வான்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், போக்சோ சட்டத்தின்கீழ் 17 பேர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். குற்றம்சாட்டப்பட்டுள்ள 17 பேரில், 14 பேர் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று தொடர்ந்த மனுவை ஏற்கெனவே சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது.
அதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் அவர்கள் மனுதாக்கல் செய்தனர். வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், சிறுமி பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கை சிபிஐ-க்கோ அல்லது வேறு அமர்வுக்கோ மாற்ற முடியாது என்று கூறியது. மேலும் குற்றம்சாட்டப்பட்டுள்ள அனைவரும் வழக்கு விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனக் கூறி, மனுவை தள்ளுபடி செய்தது.