டிராவல் பேக்கில், காலில் இருந்து இடுப்புவரையிலான உடல் பாகம் - ஆந்திர போலீஸ் அதிர்ச்சி
ஆந்திர மாநிலம் குப்பம் அருகே 25 வயது மதிக்கத்தக்க இளைஞரின் உடலை 2 துண்டுகளாக வெட்டி டிராவல் பேக்கில் மறைத்து வைத்த கொடூரம் நிகழ்ந்துள்ளது.
குப்பம் அருகே நெடுமனூர் பகுதியில் ஆந்திராவில் இருந்து கிருஷ்ணகிரி செல்லும் சாலையோரம் சந்தேகத்திற்கிடமான வகையில் டிராவல் பேக் ஒன்று இருப்பதாக காவல்துறைக்கு மக்கள் தகவல் தெரிவித்தனர். அங்கு சென்று டிராவல் பேகை சோதனை செய்த காவல்துறையினர் அதிர்ந்து போயினர். அதில், 25 முதல் 30 வயது மதிக்கத்தக்கள் இளைஞர் ஒருவரின் உடலின் ஒருபாகம் இருந்தது.
காலில் இருந்து இடுப்பு வரையான ஒரு பாகத்தை டிராவல் பேக்கில் வைத்து சாலையோரம் வீசி சென்றுள்ளனர். எஞ்சிய உடல் பாகத்தை குப்பம் காவல்துறையினர் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். ஆந்திரா,தமிழ்நாடு, கர்நாடகா மாநிலங்களில் யாரேனும் இளைஞர்கள் காணாமல் போயுள்ளார்களா அல்லது பிற மாநிலத்தில் இருந்து கொலை செய்து விட்டு இங்கு வந்து வீசி சென்றார்களா என பல்வேறு கோணங்களில் குப்பம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.