சப்-கலெக்டர் பங்களாவை தனியாருக்கு பத்திரப்பதிவு செய்த அதிகாரி! அதிர்ச்சியில் நிர்வாகம்

சப்-கலெக்டர் பங்களாவை தனியாருக்கு பத்திரப்பதிவு செய்த அதிகாரி! அதிர்ச்சியில் நிர்வாகம்
சப்-கலெக்டர் பங்களாவை தனியாருக்கு பத்திரப்பதிவு செய்த அதிகாரி! அதிர்ச்சியில் நிர்வாகம்

கள்ளக்குறிச்சியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான அரசு பங்களாவை, தனி நபர் பெயரில் பத்திரப்பதிவு செய்த துணை பதிவு அலுவலர், சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் போலி ஆவணங்கள், ஆள்மாறாட்டம் வாயிலாக பதிவாகும் மோசடி பத்திரங்களை, மாவட்ட பதிவாளர் ரத்து செய்யும் வகையில் சட்டத்திருத்தம் அமலுக்கு வந்துள்ளது. அதைத்தொடர்ந்து அரசு நிலம், வக்பு வாரியம், கோயில்களுக்கு சொந்தமான நிலங்கள், நீர் நிலைகளை பதிவு செய்வதும் தடை செய்யப்பட்டு உள்ளது. அரசின் இந்த சட்ட திருத்தத்துக்கு, சார்-பதிவாளர்களில் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் சார் பதிவாளர் அலுவலகத்தில், கடந்த மாதம் ஒரு சொத்து விற்பனை பதிவானது. அப்போது அதன் பத்திரம் மற்றும் மதிப்பில் சந்தேகம் வந்ததால், அந்த பத்திரப்பதிவு சப் கலெக்டர் நிலையில் ஆய்வுக்கு அனுப்பப்பட, பரிந்துரை செய்யப்பட்டது. அதன்படி அது ஆய்வுக்கு சென்றபோது, பத்திரத்தில் குறிப்பிடப்பட்ட சொத்து, பொதுப்பணித்துறைக்கு சொந்தமான சப் கலெக்டர் பங்களா என்பது தெரியவந்தது.

பின்னர் இதுகுறித்து சப் கலெக்டர், பதிவுத்துறை உயரதிகாரிகளிடம் புகார் செய்தார். புகாரின்பேரில் பத்திர பதிவு செய்த (பொறுப்பு) சார்-பதிவாளர் கதிரவனை, தற்காலிக பணி நீக்கம் செய்து பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து பதிவுத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், `அரசு சட்டத்தை திருத்தி உரிய வழிமுறைகளை வகுத்தாலும், மோசடி பத்திரங்களை பதிவு செய்வதில், பல சார்-பதிவாளர்கள் அடாவடியாக நடந்து கொள்கின்றனர்.

அரசு சொத்தை தனியாருக்கு மாற்றும் பத்திரத்தை ஆரம்பத்திலேயே நிராகரித்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது போலீசில் புகார் அளித்திருக்க வேண்டும். ஆனால் பத்திரத்தை பதிவு செய்து, அதன்மேல் நடவடிக்கைக்கு அனுப்பும் அளவுக்கு சென்றிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இதுபோன்ற பதிவாளர்கள்மீது, கடும் நடவடிக்கை வேண்டியது அவசியம்’ என கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com