சென்னையில் வடமாநில இளைஞர் கம்பியால் குத்திக் கொலை
சென்னை வேளச்சேரியில் ஃபாஸ்ட்புட் கடை ஊழியர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் வடமாநில இளைஞர் ஒருவர் கம்பியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.
சென்னை வேளச்சேரி ஏ.ஜி.எஸ்.காலணி 5வது பிரதான சாலையில் கடந்த 3 ஆண்டுகளாக, கார்த்திக் என்பவர் நடமாடும் துரித உணவுக் கடையை நடத்தி வருகிறார். இந்தக் கடையில் மிசோரம் மாநிலத்தைச் சேர்ந்த ஜித்தோ, ஜந்தோ, ரஞ்சித் உள்ளிட்ட 4 இளைஞர்கள் வேலை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் நேற்றிரவு மதுபோதையில் ஊழியர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில், ஜித்தோ என்ற இளைஞர் கம்பியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். மற்ற மூவரும் தப்பியோடியதாக தெரிகிறது.
இந்நிலையில் காலை ஊழியர்களை அழைப்பதற்காகச் சென்ற கார்த்திக், கால் மற்றும் கண்ணில் கொடூரமான முறையில் ஜித்தோ குத்தப்பட்டு ரத்த வெள்ளத்தில் இருந்ததைப் பார்த்து அவர் அதிர்ச்சியடைந்தார். பின்னர் இது குறித்து வேளச்சேரி காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வேளச்சேரி காவல்துறையினர் ஜித்தோ உடலைக் கைப்பற்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனைதொடர்ந்து அடையார் துணை ஆணையர் பகலவன் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு, குற்றவாளிகளை விரைந்து பிடிக்க உத்தரவிட்டார். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகைகள் சேகரிக்கப்பட்டுள்ளது. தப்பியோடிய மூவரையும் சிசிடிவி காட்சி மூலம் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.