மனைவி, குழந்தைகளை கொன்றுவிட்டு கணவர் தற்கொலை: ஆன்லைன் கேமால் விபரீத முடிவு?

மனைவி, குழந்தைகளை கொன்றுவிட்டு கணவர் தற்கொலை: ஆன்லைன் கேமால் விபரீத முடிவு?

மனைவி, குழந்தைகளை கொன்றுவிட்டு கணவர் தற்கொலை: ஆன்லைன் கேமால் விபரீத முடிவு?
Published on

சென்னை பெருங்குடியில் மனைவி, மற்றும் 2 மகன்களை கொலை செய்து வங்கி அதிகாரி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை பெருங்குடி பெரியார் சாலையில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் மணிகண்டன் (36). இவரது மனைவி தரங்க பிரியா (35). இவர்களுக்கு தரன் (10), தாஹன் (1) இரண்டு மகன்கள் இருந்தனர். மணிகண்டன் , பார்க்லேஸ் என்ற தனியார் வங்கியில் பணிபுரிந்து வந்தார்.

இவர் வசித்து வந்த அடுக்குமாடி குடியிப்பு பாதுகாப்பு அதிகம் உள்ள பகுதி. மணிகண்டனை சந்திப்பதற்காக இரண்டு பேர் இன்று காலையில் வந்தனர். குடியிருப்பை பொருத்தவரையில் சம்பந்தப்பட்டவர்களின் பார்க்க வர வேண்டும் என்றால், சம்பந்தப்பட்ட குடியிருப்புவாசிகள் அனுமதி அளித்தால் மட்டுமே உள்ளே வர முடியும்.

அந்த அடிப்படையில் மணிகண்டனை நேற்று இரவு முதல் தொடர்ந்து தொடர்பு கொண்டபோது செல்போன் எடுக்காததால் சந்திக்க வந்ததாக தெரிவித்தனர். குடியிருப்பின் காவலாளி தொடர்ந்து மணிகண்டனை தொடர்பு கொண்ட போதும் தொடர்புகொள்ள முடியாமல் இருந்தது. இதனையடுத்து அவர் இருக்கும் 7-வது மாடிக்குச் சென்று பார்த்தனர். வீடு உட்புறமாக தாழிடப்பட்டு இருந்தது.

மற்றொரு அடுக்குமாடி குடியிருப்பின் வழியாக , மணிகண்டன் வீட்டை பார்க்கும் பொழுது மின்விசிறி மட்டும் சுற்றிக் கொண்டிருந்தது பார்த்தனர். நீண்ட நேரமாகியும் கதவு திறக்காததால் துரைப்பாக்கம் போலீசாருக்கு அக்கம்பக்கத்தினர் தகவல் கொடுத்தனர்.

போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்க்கும் போது, மணிகண்டன் தூக்கில் தொங்கில் நிலையில் இறந்து கிடந்தார். மனைவி, 2 மகன்களும் எங்கே என போலீசார் அவர்களை தேடும் போது படுக்கை அறையில் தரங்க பிரியா மற்றும் ஒரு வயது குழந்தை கொலை செய்யப்பட்டு கிடப்பது தெரியவந்தது. பத்து வயது மகன் தரன் கழுத்து நெரிக்கப்பட்டு பிணமாக ஹாலில் கிடந்ததும் போலீசாருக்கு தெரிந்தது. குறிப்பாக மனைவியை கிரிக்கெட் மட்டையால் தாக்கி கொலை செய்து விட்டு, ஒரு வயது குழந்தையை தலையணை வைத்து கொன்றதாக போலீசார் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் போலீசார் விசாரணையில் மணிகண்டன் கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்தவர் என தெரியவந்தது. பார்க்லேஸ் என்ற வங்கியில் பணிபுரிந்து வந்த மணிகண்டன், இரண்டு மாதம் வேலைக்குச் செல்லவில்லை எனவும், முன்னதாக ராயல் பேங்க் மற்றும் வேர்ல்ட் பேங்க் உள்ளிட்ட பன்னாட்டு வங்கிகளில் முக்கிய பொறுப்பு வகித்து இருப்பதும் தெரியவந்துள்ளது. அவரது மனைவி தரங்க பிரியா ராயல் பேங்க் என்ற தனியார் வங்கியில் வேலை பார்த்து வந்ததும் தற்போது இரண்டு குழந்தைகள் இருப்பதால், வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருப்பதும் தெரிய வந்துள்ளது. மணிகண்டனை தேடி வந்த நபர்கள் கடனை வசூலிக்க வந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

சுமார் ஒரு கோடி ரூபாய் வரை மணிகண்டன் கடன் வாங்கி இருப்பதும் போலீசார் தெரிவித்துள்ளனர். முதற்கட்டமாக மணிகண்டன் மற்றும் அவரது மனைவி, இரண்டு மகன்கள் உடல்களுடன் போலீசார் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேதப் பரிசோதனை நாளை நடைபெறும் என போலீசார் தெரிவித்துள்ளனர். மணிகண்டன் உறவினர்களுக்கு போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்

மணிகண்டன் மனைவி மற்றும் மகன்களை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்து கொள்ள காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தியதில், கடன் சுமை காரணமாக மனைவியுடன் பிரச்சினை ஏற்பட்டு கிரிக்கெட் மட்டையால் கொலை செய்து இருக்கலாம் என தெரிவித்துள்ளனர். அதன் பிறகு தாய் தந்தை இல்லாமல் குழந்தைகள் இருக்க முடியாது என்ற அடிப்படையில் அவர்களையும் கொலை செய்துவிட்டு தற்கொலை செய்து இருக்கலாம் என போலீசார் தெரிவிக்கின்றனர்.

மேலும் மணிகண்டனின் செல்போன் ஆய்வு செய்தபோது ஆன்லைன் கேம்கள் இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். ஆன்லைன் கேமில் பணத்தை இழந்து கடன் சுமை ஏற்பட்டதால் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது. அவரது செல்போனை போலீசார் கைப்பற்றி உள்ளனர். சைபர் ஆய்வகத்திற்கு அனுப்பி ஆய்வு செய்த பிறகு ஆன்லைன் கேம் குறித்து முழுமையாக தெரிய வரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

"கணவன் மனைவி இடையே எந்தவித பிரச்சனையும் பெரிதாக ஏற்படவில்லை எனவும், சந்தோஷமாக வாழும் குடும்பம் திடீரென குடும்பத்தை கொலை செய்துவிட்டு, மணிகண்டன் தற்கொலை செய்து கொண்டது எதற்காக என தெரியவில்லை" என்று அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் பக்கத்து வீட்டுக்காரர்களை தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் உள்ளவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மாத வாடகை 35 ஆயிரம் ரூபாய் கொடுத்து, வருடத்திற்கு 30 லட்ச ரூபாய் வரை சம்பாதிக்கும், மணிகண்டன் குடும்பத்தை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட காரணம் என்ன என்பது குறித்து பல்வேறு கோணங்களில் துரைப்பாக்கம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com