பரோட்டா விலையை கேட்டு கடையை அடித்து நொறுக்கிய கும்பல்
சென்னை குரோம்பேட்டையில் பரோட்டா விலை அதிகம் எனக்கூறி தனியார் உணவகம் ஒன்றில் மோதலில் ஈடுபட்டவர்களில் ஒன்பது பேரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த சிலர் குரோம்பேட்டையில் உள்ள தனியார் உணவகம் ஒன்றில் சாப்பிட சென்றுள்ளனர். அப்போது பரோட்டா சாப்பிடுவதற்காக அதன் விலையை கடைக்காரரிடம் கேட்டதாக தெரிகிறது. அதற்கு கடைக்காரர் 25 ரூபாய் எனக் கூற, உடனே அவர்கள் விலை அதிகம் என்பதை சுட்டிக் காட்டி மிகவும் கீழ் தரமான ஆபாச வார்த்தைகளால் திட்டியுள்ளார்.
மேலும் உணவகத்தில் பணிபுரிந்த ஊழியர்களுக்கும் அவர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இரு தரப்பினருக்கும் மிகபெரிய கைகலப்பு ஏற்பட்டதால் சுமார் 50 க்கும் மேற்பட்டோர் ஒருவரையொருவர் சேர், பால் டப்பா என கையில் கிடைத்த பொருட்களை எல்லாம் எடுத்து அடித்துக் கொண்டனர். இதனைத்தொடர்ந்து உணவகத்தில் இருந்த நாற்காலி உள்ளிட்ட பொருட்களை அடித்து நொறுக்கி, ஊழியர் ஒருவர் மீது வெந்நீரை ஊற்றியதாக தெரிகிறது. இந்தக் கோஷ்டி மோதலால் 30 நிமிடங்கள் ஜி.எஸ்.டி சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து இந்த மோதலில் 15க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் விரட்டி பிடித்தனர். மேலும் சிலரை தேடி வருகின்றனர்.
காவல்துறையினர் நடத்திய விசாரணையில், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் சென்னையில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் கலந்துக் கொள்ள வந்தவர்கள் என்பதும் மது போதையில் உணவகத்தில் தகராறில் ஈடுபட்டதும் தெரியவந்தது. காவல் நிலையம் எதிரிலேயே நடந்த இச்சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.