விருதுநகர் மாவட்டம் கல்வார்பட்டி கிராமத்தில் குடும்ப பிரச்னையில் தனது இரு குழந்தைகளை கழுத்தறுத்து கொன்றுவிட்டு தந்தையும் தற்கொலை செய்துகொண்டார்.
விருதுநகர் மாவட்டம் கல்வார்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் அந்தோணிராஜ். இவர் மனைவி முனீஸ்வரி. இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். கூலித்தொழிலாளியான அந்தோணி ராஜ் நேற்றிரவு தனது மனைவியுடன் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. ஆத்திரத்தில் இருந்த அந்தோணி ராஜ் அதிகாலையில் தனது மகள் முத்துலட்சுமி (9), மகன் முனீஸ்வர் (4), மனைவி அகியோரை கழுத்தறுத்து கொலை செய்ய முயற்சித்துள்ளார். இதில் இரு குழந்தைகள் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர். இவர்களில் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் இதுதொடர்பாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதற்கிடையில் அந்தோணி ராஜ் கொலை செய்ய பயன்படுத்திய அரிவாளுடன் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மூன்று பேரையும் சிகிச்சைக்காக சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் குழந்தைகள் இருவரும் சம்பவ இடத்திலே இறந்தது தெரியவந்தது. முனீஸ்வரி ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு கழுத்து மற்றும் தலை பகுதிகளில் பயங்கர வெட்டுக்காயங்கள் ஏற்பட்டுள்ளது. எனவே அவரை மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க உள்ளதாக மருத்துவமனை வட்டாரத் தகவல் தெரிவிக்கிறது.
இந்நிலையில் மனைவி மற்றும் குழந்தைகள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய அந்தோணி ராஜை காவல்துறையினர் தேடி வந்தனர்.அப்போது கல்வார்பட்டி கிராமத்தில் இருந்து சற்று தொலைவில் உள்ள சவுக்கர் ஓடை பகுதியில் அவர் பதுங்கி இருப்பதாக போலீஸுக்கு தகவல் கிடைத்தது.இதனையடுத்து காவல்துறையினர் அப்பகுதிக்கு சென்றனர். அவர்களை கண்டதும் அந்தோணி அங்கிருந்து தப்பிச்செல்ல முயன்றார். ஆனால் காவல்துறையினர் அவரை சுற்றி வளைத்தனர். அப்போது தனது கையில் இருந்த அரிவாளை காட்டி அருகில் யாரும் வராதீர்கள் என மிரட்டினார். யாரும் எதிர்பாராத வேலையில் தனது கழுத்தை அறுத்து தற்கொலை முயன்றார். அவரை மீட்ட காவல்துறையினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். தற்போது முனீஸ்வரி மட்டும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.