திருமணமாகாமலேயே தாய்... பெண்ணை ஆணவக்கொலை செய்து, பேரனை வீதியில் வீசிய கொடூர குடும்பம்!
திருச்சியில் பிறந்து சில நாட்களே ஆன பச்சிளம் குழந்தை தூக்கிவீசப்பட்ட வழக்கில் திருப்புமுனையாக அமைந்துள்ளது ஒரு ஆணவபடுகொலை.
திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறை அருகே கடந்த வெள்ளிக்கிழமை (09.12.2022) அன்று, பிறந்து சில நாட்களே ஆன நிலையில் தூக்கிவிசப்பட்ட பச்சிளம் ஆண் குழந்தை ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அக்குழந்தையை அக்கம்பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
குழந்தையை பெற்றெடுத்து தூக்கி வீசியது யார் என்ற தேடுதலில் ஜீயபுரம் காவல் நிலைய போலீசார் ஈடுபட்டனர். இதுகுறித்த சந்தேகத்தின் பேரில் எலமனூர் பகுதியை சேர்ந்த ஒரு கல்லூரி மாணவியின் வீட்டுக்கு போலீசார் விசாரணைக்காக சென்றனர். அப்போது அந்த மாணவி விஷமருந்திய நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். உடனே அவரை மீட்ட போலீசார் திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். தொடர் சிகிச்சை அளிக்கபட்டநிலையில், பலனளிக்காமல் அந்த மாணவி கடந்த (15.12.2022) உயிரிழந்தார்.
தொடக்கத்தில் சந்தேக மரணம் என வழக்கு பதிவுசெய்த ஜீயபுரம் போலீசார், திருச்சி மாவட்ட குற்றவியல் மூன்றாவது நடுவர் நீதிமன்ற நீதிபதியிடம் அந்த மாணவி கொடுத்த மரண வாக்கு மூலத்தை அடிப்படையாகக்கொண்டு, மாணவியின் மரணத்திற்கு பிறகு அதனை கொலை வழக்காக மாற்றியுள்ளனர்.
மரணித்த மாணவி கொடுத்த மரண வாக்குமூலத்தில், “திருமணத்திற்கு முன்பே கருவுற்ற நான், ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தேன். இது அக்கம்பக்கத்தினருக்கு தெரிந்துவிட்டது. இதனால் ஆத்திரமடைந்து எனது தந்தை செல்வமணியும், அத்தை மல்லிகாவும் எனக்கு பூச்சிக்கொல்லி மருந்தை கட்டாயப்படுத்தி குடிக்கச்செய்தனர்” என வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்.
இந்நிலையில் தற்போது மாணவியின் தந்தை செல்வமணி மற்றும் மாணவியின் அத்தை மல்லிகா ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். பால்மணம் கூட அறியாத பச்சிளம் குழந்தையை கொடூரமாக வீசிச்சென்றது, குழந்தை பெற்றெடுத்து சில நாள்களே ஆன தன் மகளையே கௌரவம் என்ற பொய் பிம்பத்திற்காக தந்தையே கொலை செய்தது ஆகியவை மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.