மத்திய அரசு வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி

மத்திய அரசு வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி

மத்திய அரசு வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி
Published on

கோவை வடவள்ளி அருகேயுள்ள பொம்மனம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி. இவருக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் கடந்த 2014 ம் ஆண்டில் மூத்த மகன் வேதா சுப்பிரமணியம் பட்டப்படிப்பு முடித்து வேலை தேடிக்கொண்டிருந்த போது, பால்காரர் குமார் என்பவர் மூலம் ஈஸ்வர் ராமசந்திரன் என்பவரும், மருதமலை அடிவாரத்தில் அருணகிரிநாதர் வழிபாட்டு மையம் என்ற பெயரில் ஜோதிட தொழில் செய்து வரும் குமரசிவம் என்பவரும் அறிமுகமாகியுள்ளனர். 

இந்நிலையில் ஈஸ்வர் ராமச்சந்திரன் மத்திய அரசின் கலால்துறையில் பணியாற்றி வருவதாகவும், அத்துறையில் வேலை வாங்கி தருவதாகவும் கூறி 15 லட்ச ரூபாய் கேட்டதாக கூறப்படுகிறது. தமிழக முதலமைச்சர்,  பிரதமர்,  கவர்னர் போன்றவர்களுடன் விருது வாங்குவது போல ஈஸ்வர் புகைப்படங்களை காட்டியும்,  வேலை கிடைக்கவில்லை எனில் பணத்தை திரும்ப தருவதாகவும் நம்பிக்கை அளித்துள்ளார். 

இதையடுத்து கிருஷ்ணசாமி 11 லட்ச ரூபாய் பணத்தை ஈஸ்வரிடம் கொடுத்ததை அடுத்து, சில மாதங்களில் வேதா சுப்பிரமணியத்திற்கு மத்திய கலால்துறையில் நுண்ணறிவு அதிகாரி வேலை கிடைத்ததற்கான பணியாணை,  அடையாள அட்டை உள்ளிட்டவற்றை வழங்கியுள்ளார். மேலும் ஒரு வீட்டை மத்திய கலால் நுண்ணறிவு பிரிவு அலுவலகம் எனக்கூறி இதே போல 35 க்கும் மேற்பட்டோருக்கு 6 மாத காலம் பயிற்சி என ஈஸ்வரே பயிற்சி வழங்கியதாகவும், மாத சம்பளமாக 27 ஆயிரத்து 760 ரூபாய் பணத்தை வங்கி கணக்கில் செலுத்தியதாகவும் தெரிகிறது.

அதன்பின் பணம் வாங்கி வேலை தந்த விவரம் உயரதிகாரிகளுக்கு தெரிந்து விட்டதால்,  சென்னை அலுவலகத்திற்கு இடமாற்றம் செய்து விட்டதாகவும் கூறிய ஈஸ்வர், கொஞ்ச காலம் பொறுத்திருங்கள் மீண்டும் வேலையில் சேர்த்து கொள்கிறேன் என தெரிவித்துள்ளார். இதையடுத்து ஈஸ்வர் தலைமறைவாகி விட்டார். இதன்பின்னர் விசாரித்த போது ஈஸ்வர் ராமச்சந்திரனும், குமரசிவமும் மத்திய அரசு வேலை வாங்கி தருவதாக போலி அரசு அலுவலகம் நடத்தியும், போலி அரசு ஆவணங்கள் தயாரித்தும் பலரிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்ததாக தெரிந்தது. அதனை அடுத்து கிருஷ்ணசாமி என்பவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார். 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com