வீட்டு வாசலில் உறங்கி கொண்டிருந்த மூதாட்டி மீது ஏறி இறங்கிய கார்... சம்பவ இடத்திலேயே பலி
செஞ்சி அருகே வீட்டு வாசலில் உறங்கி கொண்டு இருந்த மூதாட்டி மீது கார் ஏறி இறங்கிய விபத்தில் மூதாட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த அனந்தபுரம் பிள்ளையார் கோயில் தெருவில் வசித்து வருபவர் மூதாட்டி லட்சுமி (வயது 65). தனது மகன் திருமலை என்பவரின் வீட்டு வாசலில் நேற்று இரவு படுத்து உறங்கி கொண்டிருந்திருக்கிறார் லட்சுமி. அப்போது அதே தெருவில் வசித்துவரும் தமிழ்நாடு காவல் துறையில் 10'th பட்டாலியன் காவல் படையில் சிறப்பு காவலராக பணிபுரிந்து வரும் முத்துப்பாண்டி (வயது 26) என்பவர், நள்ளிரவில் காரை ஓட்டி வந்துள்ளார்.
மூதாட்டி உறங்குவது அறியாமல் அவர் காரை ஓட்டியதாக சொல்லப்படுகிறது. மூதாட்டி லட்சுமியும் உறக்கம் கலைந்து சுதாரிப்பதற்குள், அவர் தலை மீது கார் ஏறி இறங்கியுள்ளது. இந்த விபத்தில் மூதாட்டி லட்சுமி சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்தபோது மூதாட்டி லட்சுமி பரிதாபமாக உயிரிழந்த கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில் காவலர் முத்துப்பாண்டி அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இதனையடுத்து அங்கு சென்ற அனந்தபுரம் போலீசார் மூதாட்டி லட்சுமியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.