சென்னை: மதுகுடித்துவிட்டு வந்த தம்பியை கொலை செய்த அண்ணன்; கொலைக்கு உதவிய தாய் கைது
சென்னையில், வீட்டில் இருந்த பணத்தை திருடிக்கொண்டு, அதைவைத்து மது அருந்தி ஊர் சுற்றிய சகோதரனை அடித்துக் கொலை செய்ததாக அண்ணனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். கொலையை மறைக்க உதவிய தாயாரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை வியாசர்பாடி மூர்த்திங்கர் நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வசித்து வருபவர் ஈஸ்வரி. இவரது மகன்கள் கோகுல கண்ணன், வினோத்குமார் என்ற வெள்ளை. கோகுலக்கண்ணன் தனது இருசக்கர வாகனத்தை பழுது நீக்குவதற்காக தனது நண்பரிடம் 15 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கிக் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு அதனை வீட்டிற்கு எடுத்து வந்து வைத்துள்ளார்.
இதனைப் பார்த்த அவரது தம்பி வினோத்குமார் அந்தப் பணத்தை திருடிச் சென்று குடித்துவிட்டு தனது நண்பர்களுடன் ஊர் சுற்றியுள்ளார். நேற்று இரவு குடிபோதையில் வினோத்குமார் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது கோகுல், அவரது தாய் ஈஸ்வரி ஆகிய இருவரும் வினோத்குமாரிடம் ‘பணம் எடுத்தியே எப்போது தருவாய்’ என்று கேட்டு தகராறில் ஈடுபட்டிருக்கின்றனர்.
கடும் வாக்குவாதம் முற்றி, ஒருகட்டத்தில் கோகுலக்கண்ணன் வினோத்குமாரை சரமாரியாக அடித்துளளார். இதில் வினோத்குமார் வீட்டிலேயே மயங்கி கீழே விழுந்துள்ளார். அதன் பின்பு கோகுலக்கண்ணன் மற்றும் தாய் ஈஸ்வரி இருவரும் தூங்க சென்று விட்டனர். மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது வினோத் குமார் ரத்த காயங்களுடன் மூச்சு பேச்சு இல்லாமல் இருந்துள்ளார். உடனே இது குறித்து அவர்களது உறவுக்காரப் பெண்ணான ஒருவரை வரவைத்து வினோத்குமாரை பரிசோதனை செய்தபோது அவர் இறந்துவட்டதாக தெரிவித்துள்ளார்.
இதனைக் கேட்ட கோகுலக் கண்ணன் மற்றும் அவரது தாயார் ஈஸ்வரி இருவரும் செய்வதறியாது அதிர்ந்துள்ளனர். அதற்குள் விஷயம் வெளியே தெரியவர அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து எம்கேபி நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு சென்ற எம்கேபி நகர் காவல்துறையினர், வினோத் குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன்பின் ஈஸ்வரி மற்றும் அவரது மகன் கோகுல் ஆகியோரிடம் விசாரித்த போது, அவர்கள், “வினோத் குமார் நேற்று குடித்துவிட்டு வீட்டிற்கு வந்தான். வரும்போதே ரத்த காயத்துடன் வந்தான். யாரோ அவனை அடித்து விட்டார்கள்” என்று போலீஸ் விசாரணையில் தெரிவித்திருக்கின்றனர்.
அவர்களது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த போலீசார், இருவரையும் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்ததில் இரவு கோகுலக்கண்ணன் வினோத்குமாரை அடித்து ரத்தக் காயத்தை உண்டாக்கியது தெரியவந்தது. அதன்பிறகு போதையில் அனைவரும் தூங்கிவிட்ட பிறகு மறுநாள் காலையில் எழுந்து பார்த்தபோது வினோத்குமார் இறந்துள்ளதை கோகலக் கண்ணன் மற்றும் ஈஸ்வரி ஆகிய இருவரும் தெரிந்து கொண்டனர் என்பதும் தெரியவந்திருக்கிறது.
அதன்பிறகு வினோத்குமாரின் ரத்தக் காயங்கள் அனைத்தையும் தண்ணீரால் துடைத்து அவரது உடைகளை கழட்டி வேறு உடைகளை மாற்றி தற்செயலாக குடிபோதையில் இறந்ததுபோல பொது மக்களை நம்ப வைக்க முயற்சி செய்துள்ளனர். அதற்குள் விஷயம் வெளியே தெரிந்து போலீசார் சென்று அனைத்தையும் கண்டு பிடித்துவிட்டனர் என போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இதனை அடுத்து கோகுல கண்ணன் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த தாய் ஈஸ்வரி ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்த எம்கேபி நகர் போலீசார் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.