கார்களை நூதன முறையில் திருடி ரூ.10 ஆயிரத்துக்கு விற்றவர் கைது
சாலையோரமாக நிறுத்தப்பட்டுள்ள கார்களை நூதன முறையில் திருடிய நபர் சென்னையில் கைதுசெய்யப்பட்டுள்ளார். திருடிய 5 லட்ச ரூபாய் மதிப்பிலான கார்களை வெறும் பத்தாயிரத்திற்கு விற்றதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சென்னையில் ஓரிரு மாதங்களுக்கு முன் சாலையோரம் நிறுத்தப்பட்ட வாடகை கார்கள் திருடு போனதாக புகார்கள் வந்தன. இதுதொடர்பாக விசாரிக்க பெருநகர காவல்ஆணையர் உத்தரவிட்டதன்பேரில் 4 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடைபெற்றது. அப்போது கேகே நகர் பகுதியில் நள்ளிரவில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த ஒரு காரை, 40 வயது மதிக்கத் தக்க நபர் ஓட்டிச் செல்வது அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமிராவில் பதிவானது. இதையடுத்து வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டது. அப்போது சந்தேகத்தின் பேரில் இருவரைப் போலீசார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் அகஸ்டின், நல்லையன் என்று தெரியவந்தது.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் கார்களை திருடி அவற்றுக்கான போலி ஆவணங்களை தயாரித்து நெல்லை, மதுரை போன்ற இடங்களில் விற்றது தெரியவந்தது. இந்த கார் திருட்டுக்கு மூளையாக செயல்பட்ட நெல்லையைச் சேர்ந்த அப்துல் ஹமீது என்பவரும் கைது செய்யப்பட்டார்.
இவர்களிடம் இருந்து ஆறு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுபோல ஏற்கனவே திருடிய கார்களை பத்தாயிரம் முதல் 2 லட்சம் ரூபாய் வரை விற்றதும் தெரியவந்துள்ளது. கார்கள் திருட்டு தொடர்பாக மேலும் இருவரை போலீசார் தேடி வருகிறார்கள்.