தஞ்சாவூர்: திருமணத்தை மீறிய உறவுக்கு இடையூறாக இருந்த சிறுமி அடித்துக் கொலை
தஞ்சாவூரில் திருமணத்தை மீறிய உறவுக்கு இடையூறாக இருந்ததாக, அடித்துக்கொன்று ஆற்றில் வீசப்பட்ட 7 வயது சிறுமியின் உடல் கல்லணை கால்வாயில் மீட்கப்பட்டது.
கோரிகுளத்தைச் சேர்ந்த, கணவரை இழந்த விஜயலட்சுமி என்பவர் தனது 7 வயது மகள் மற்றும் 4 வயது மகனுடன் வசித்து வந்துள்ளார். விஜயலட்சுமி தனது உறவினரான வெற்றிவேல் என்பவருடன் தொடர்பு ஏற்பட்டு, தகாத உறவாக மாறியதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், தஞ்சை கல்லணை கால்வாயின் 20 கண் பாலம் பகுதியில் கரை ஒதுங்கிய சிறுமியின் சடலத்தை தீயணைப்புத் துறையினர் கைப்பற்றி, கூராய்வுக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்த சிறுமி விஜயலட்சுமியின் மகள் என்பது தெரியவந்தது.
இதையடுத்து உறவினர்கள் அளித்த புகாரின்பேரில் விஜயலட்சுமியையும் வெற்றிவேலையும் காவல் துறையினர் கைது செய்தனர். விசாரணையில் தங்களது உறவுக்கு இடையூறாக இருந்ததால் சிறுமியை அடித்துக் கொன்று கல்லணை கால்வாயில் வீசியதாக வெற்றிவேல் கூறியுள்ளார்.