தஞ்சை | ஆசிரியை வீட்டில் 58 சவரன் நகைகள் கொள்ளை – உறவினர் கைது
செய்தியாளர்: ந.காதர்உசேன்
தஞ்சாவூர் பள்ளியக்ரஹாரம் மெயின் ரோட்டில் வசிப்பவர் பாலசுப்பிரமணியன். இவர் பெங்களூருவில் உள்ள ஐ.டி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி வளர்மதி, அரசுப் பள்ளியில் உதவி தலைமையாசிரியையாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த 2-ம் தேதி இவரது வீட்டில் உறவினர் ஒருவருடைய நிலத்தின் மூலப்பத்திரம் பீரோவில் இருந்துள்ளது. அதை எடுத்து தர உறவினர் கேட்டுக் கொண்டதால், வளர்மதி தன்னுடன் பணியாற்றும் பணியாளர் ஒருவரை அனுப்பி, அருகில் கடை வைத்திருக்கும் முதியவரிடம் சாவியை வாங்கி வீட்டை திறந்து பத்திரத்தை எடுத்து வருமாறு கூறியுள்ளார்.
அதன்படி அவரும் பத்திரத்தை எடுத்துச் சென்று விட்டார். இதையடுத்து ஊருக்கு வந்த பாலசுப்பிரமணியன் நகைகளை அடகு வைக்க பீரோவில் இருந்த நகைகளை தேடியுள்ளார். அப்போது அவை காணாமல் போனது தெரியவந்தது. சுமார் 58 சவரன் நகைகள் மாயமானது தொடர்பாக மனைவிடம் கேட்டபோது, கடந்த 2-ம் தேதி பத்திரத்தை எடுத்துச் சென்ற தகவலை கூறியுள்ளார். இதையடுத்து தஞ்சாவூர் மேற்கு போலீஸாருக்கு புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் உத்தரவு படி காவல்துறை துணை கண்காணிப்பாளர் சோமசுந்தரம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த தனிப்படை போலீசார், தீவிர விசாரணை நடத்தினர். இதில், வளர்மதியின் உறவினர் தஞ்சை அடுத்த திட்டை அக்ரஹாரத்தைச் சேர்ந்த சுதாகர் (39) என்பவர் நகைகளை திருடியது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து சுதாகரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து அனைத்து நகைகளையும் பத்திரமாக மீட்டனர்.