கன்னட திரைப்படத் தயாரிப்பாளர் கொலை - 6 பேர் கைது

கன்னட திரைப்படத் தயாரிப்பாளர் கொலை - 6 பேர் கைது
கன்னட திரைப்படத் தயாரிப்பாளர் கொலை - 6 பேர் கைது

பெங்களூரில் கன்னட திரைப்படத் தயாரிப்பாளர் ரமேஷ் ஜெயினை கொலை செய்த 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 

கன்னட திரைப்படத் தயாரிப்பாளர் ரமேஷ் ஜெயின். இவர் பெங்களூர் விஜயநகர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவர் சில படங்களை மட்டுமே தயாரித்துள்ளார். பிளாஸ்டிக் தொழிற்சாலை ஒன்றையும் நடத்தி வந்துள்ளார். 

மேலும் தீபாஞ்சலி நகர் பகுதியில் இவருக்கு சொந்தமான அபார்ட்மெண்ட் ஒன்று உள்ளது. அதை வாடைகைக்கு விட்டு பணம் வாங்கி வந்துள்ளார். இந்நிலையில் இவருக்கு தெரிந்த நபரான நசீர் என்பவரின் உறவினரை தனது அபார்ட்மெண்டில் வாடகைக்கு வைத்துள்ளார். இதில் வாடகை வாங்குவது தொடர்பாக இவர்களுக்குள் ஏற்கனவே பிரச்னை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. 

இதையடுத்து கடந்த புதன் கிழமை வாடகை வசூலித்துவிட்டு வருவதாக கூறி சென்ற ரமேஷ் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த ரமேஷின் குடும்பத்தினர் நசீருக்கு கால் செய்துள்ளனர். ஆனால் ரமேஷ் இங்கு வரவில்லை எனக் கூறி போனை நசீர் துண்டித்துள்ளார். 

இதனால் ரமேஷின் மகன் ராகேஷ் விஜயநகர் போலீஸில் ரமேஷை காணவில்லை என புகார் அளித்தார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் ரமேஷை தேடும் பணியில் ஈடுபட்டனர். 

இந்நிலையில் வியாழன் இரவு 8 மணியளவில் துபசிபால்யா கங்கேரி ரயில்வே நிலையத்திற்கு இடையே உள்ள கால்வாயில் ரமேஷின் உடல் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து விரைந்து சென்ற போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதைத்தொடர்ந்து இந்தக் கொலையில் சம்பந்தபட்ட 6 பேரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், “கொலை செய்யப்பட்டவரின் சட்டை பாக்கெட்டில் இருந்த ஓட்டுநர் உரிமத்தை வைத்து ரமேஷ் என கண்டுபிடித்தோம். வாடகைக்கு இருந்தவர்கள் ரமேஷை கொலை செய்துள்ளனர். வாடகை தருவதில் வாக்குவாதம் முற்றவே கொலையில் முடிந்துள்ளது. இது தொடர்பாக இஸ்லாம் கான், அப்துல் ஹசீம், சயது அகமது, முகமது ஜுபைர், ஹீனா, சபீனா தாஜ் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் வேறு ஏதாவது கொலைக்கு காரணம் உள்ளதா என விசாரணை மேற்கொண்டு வருகிறோம்.” எனத் தெரிவித்தனர். 

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com