தொடக்கப்பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியர் போக்சோவில் கைது
முதுகுளத்தூர் அருகே தொடக்கப் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே கொட்டகுடி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. அந்தப் பள்ளியில் 30க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். அப்பள்ளியில் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக ஆதி முத்தமிழ்செல்வன் என்பவர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர், பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
மாணவிகளின் பெற்றோர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் குழந்தைகள் நல அலுவலர்கள் இதுகுறித்து விசாரணை நடத்தினர். அதனைத்தொடர்ந்து அபிராமம் போலீசார், ஆசிரியர் ஆதி முத்தமிழ்ச் செல்வனை விசாரணைக்காக அபிராமம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தங்களின் விசாரணையை நடத்தி வந்தனர். அதன்முடிவில், ஆசிரியர் ஆதி முத்தமிழ்செல்வன் பள்ளி சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு செய்தது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. இதையடுத்து அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

