சென்னையில் டாஸ்மாக்கில் ஏற்பட்ட தகராறில் நண்பர் தள்ளிவிட்டதில் ஹரிகிருஷ்ணன் என்பவர் உயிரிழந்தார்.
சென்னை ராயப்பேட்டை முத்து தெருவைச் சேர்ந்தவர் பெயிண்டர் ஹரி கிருஷ்ணன். அண்ணா சாலை ஒயிட்ஸ் சாலை உள்ள அரசு டாஸ்மாக் கடையில் நேற்றிரவு தனது நண்பர்களான ராயப்பேட்டையைச் சேர்ந்த கார்த்தி, அசோக் ஆகியோருடன் சேர்ந்து மது அருந்தினர். அப்போது போதையில் ஹரிகிருஷ்ணனுக்கும், அசோக்கிற்கும் தகராறு ஏற்பட்டது.இதில் ஹரிகிருஷ்ணனை அசோக் கீழே தள்ளி விட்டார். அதில் அவருக்கு பின் தலையில் காயம் ஏற்பட்டது. தகவல் அறிந்து அண்ணாசாலை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஹரிகிருஷ்ணனை மீட்டு சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
சிகிச்சையில் இருந்தபோது திடீரென நள்ளிரவில் ஹரிகிருஷ்ணன் மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடினார். போலீசார் தேடியபோது ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை வெளியே செல்லும் நுழைவு வாயிலில் மயங்கி கிடந்தார். மருத்துவமனைக்குள் கொண்டு சென்று பரிசோதித்த போது இறந்து விட்டதாக தெரிந்தது. இதையடுத்து அண்ணாசாலை போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து அசோக், கார்த்தியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.