
மதுரையில் நேற்றிரவு தெற்கு வாசல் பாலத்திற்கு கீழே தண்டவாளத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று வெட்டிக் கொலை செய்யப்பட்டு வீசப்பட்டுள்ளதாக தெற்கு வாசல் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில், கொலை செய்யப்பட்டவர் கணபதி ராஜா என்பது தெரிய வந்துள்ளது,
இவர், தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும், மதுரை ஜெய்ஹிந்த்புரம் தென்றல் நகர் பகுதியில் தனியாக வசித்து வந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து கணபதி ராஜாவின் உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், மதுரை கீரைத்துறை பகுதியைச் சேர்ந்த மாயழகு என்பவரின் 19 வயது மகளை கணபதி ராஜா 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு கணபதி ராஜாவை சந்தித்த மாயழகு, தனது மகளுடனான காதலை கைவிடும் படி கூறியுள்ளார், இதில் இரு தரப்புக்கும் பிரச்னை உண்டானதை அடுத்து காதலர்கள் இருவரும் சில மாதங்களாக சந்தித்துப் பேசுவதை தவிர்த்து வந்தனர்.
இந்நிலையில், சித்திரை திருவிழாவில் தனது மகளுடன் கணபதி ராஜாவை பார்த்த மாயழகு, கணபதி ராஜாவை கொலை செய்ய திட்டமிட்டு தனது இரு மகன்களான காளிதாஸ் (21) கண்ணதாசன் (17) ஆகியோருடன் மதுரை தெற்கு வாசல் ரயில் தண்டவாளத்தின் அருகே சென்று, கணபதி ராஜாவை சராமாரியாக வெட்டி வீசி விட்டு தப்பியோடியுள்ளனர். இதனையடுத்து அதிகாலை மூவரையும் காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.