”லிப்ட் துவாரம் வழியே உள்ளே சென்றோம்” - தாம்பரம் நகைக்கடை கொள்ளை நடத்தப்பட்டது எப்படி?

”லிப்ட் துவாரம் வழியே உள்ளே சென்றோம்” - தாம்பரம் நகைக்கடை கொள்ளை நடத்தப்பட்டது எப்படி?
”லிப்ட் துவாரம் வழியே உள்ளே சென்றோம்” - தாம்பரம் நகைக்கடை கொள்ளை நடத்தப்பட்டது எப்படி?

சென்னை தாம்பரம் அருகே பிரபல நகைக்கடையில் கொள்ளையடிக்கப்பட்ட விவகாரத்தில், வட மாநிலத்தை சேர்ந்த மூன்று சிறார்கள் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 1 ½ கோடி மதிப்பிலான தங்க-வைர நகைகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை தாம்பரம் அடுத்த கெளரிவாக்கத்தில் உள்ள ப்ளுஸ்டோன் தங்க நகைக்கடையில், இன்று அதிகாலை 4.20 மணியளவில் கடைக்குள் பைப் வழியாக ஏறிச் சென்று லிப்ட் வழியில் இறங்கி உள்ளே சென்று தங்க-வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது.

தொடர்ந்து கடையில் திருட்டு நடப்பது குறித்து மேலாளர் ஜெகதீசன் என்பவருக்கு அலாரம் மூலம் தகவல் சென்ற நிலையில், உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுக்கபட்டு சேலையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு மேற்கொண்டனர். நிகழ்விடத்தில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டதில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது வட மாநில நபர் என்பதை உறுதிபடுத்தினர்.

பின்னர் அப்பகுதி முழுவதும் தனிப்படை போலீசார் சோதனையிட்டு அருகில் சுற்றித் திரிந்த நபரை கைது செய்தனர். அதனையடுத்து மேலும் சம்பந்தப்பட்ட இரண்டு சிறார்களையும் கைது செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இது தொடர்பாக சோழிங்கநல்லூர் தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது, இன்று காலையில் கெளரிவாக்கத்தில் ப்ளுஸ்டோன் நகைக்கடையில் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாக 6 மணிக்கு தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து போலீசார் நிகழ்விடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொள்ளப்பட்டது. சிசிடிவி காட்சிகள் உதவியோடு விரைவாகவே 8.30 மணியளவில் குற்றவாளியான ஒருவர் கைது செய்யப்பட்டார். பின்னர் இருவர் என மூன்று சிறார்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 1½ கோடி மதிப்பிலான நகைகள் மீட்கப்பட்டது.

கொள்ளையர்கள் லிப்ட் துவாரம் வழியாக கடைக்குள் சென்று கதவை உடைத்து திருடியுள்ளனர். 3 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் கடையில் இருந்த நிலையில், லாக்கரில் இருந்த நகை தவிர்த்து மீதியிருந்த நகைகள் கொள்ளை போனது. திருடிய நகைகளை வீட்டில் வைத்து விட்டு கொள்ளையர்கள் வெளியில் வந்து சுற்றிதிரிந்துள்ளனர்.

கொள்ளையடிக்கும் திட்டத்தில் 3 மாதமாக வாடகை வீட்டில் தங்கி, நகை கடை பக்கத்திலுள்ள ரோஸ் மில்க் ராஜா என்ற கடையில் வேலை பார்த்து வந்து, இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுப்பட்டுள்ளதாக பேட்டியில் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com