பாலியல் புகார் - ஆசிரியர், தனியார் பள்ளிக்கு சம்மன்
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்த புகாரில் கைதான ஆசிரியர், தனியார் பள்ளி நிர்வாகிக்கு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.
சென்னை கேகே நகரில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் 12- ஆம் வகுப்பு வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன் என்பவர், அதே வகுப்பை சேர்ந்த மாணவி ஒருவருக்கு வாட்ஸ்அப் மூலம் பாலியல் உணர்வைத் தூண்டும் வகையில் மெசேஜ் அனுப்பியதாக புகார் அளிக்கப்பட்டது. இதனால் ஆசிரியர் ராஜகோபாலனை கைது செய்து வடபழனி காவல் நிலையத்தில் வைத்து ஆசிரியர் ராஜகோபாலனிடம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றத்தடுப்பு பிரிவு துணை ஆணையர் ஜெயலட்சுமி, தி.நகர் காவல்துறை துணை ஆணையர் ஹரிகிரண் ஆகியோர் விசாரணை நடத்தினர்.
இதையடுத்து நங்கநல்லூரில் உள்ள ஆசிரியர் ராஜகோபாலனின் வீட்டில் இருந்து அவரது செல்போன், லேப்டாப் ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்து ஆய்வு செய்தபோது வாட்ஸ் அப் மெசேஜ்களை அவர் நீக்கம் செய்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சைபர் கிரைம் போலீசாரின் உதவியோடு நீக்கம் செய்த மெசேஜ்களை திரும்பப்பெற்ற போலீஸார் அதனை வைத்து ராஜகோபாலனிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் ராஜகோபாலன் கடந்த 27 ஆண்டுகளாக இந்த பள்ளியில் பணிபுரிந்து வருவதும், கடந்த ஐந்து ஆண்டுகளாக 11, 12-ம் வகுப்பு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் வகையில் ஆபாச மெசேஜ்களை அனுப்பி வந்ததாகவும், மாணவிகளிடம் வாட்ஸ்அப் மூலமாக செய்திகள் அனுப்பி, மாணவிகளின் அந்தரங்க புகைப்படத்தை அனுப்பு சொல்வது போன்ற செயல்களில் ஈடுபட்டதும் தெரியவந்தது. மேலும் சில ஆசிரியர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும் ராஜகோபாலன் கூறியதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்நிலையில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்த புகாரில் கைதான ஆசிரியர், தனியார் பள்ளி நிர்வாகிக்கு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. மேலும் முன்னாள் மாணவி மற்றும் முதன்மைக் கல்வி அலுவலருக்கும் சம்மன் அனுப்பியுள்ளது.