கொள்ளை புகாரில் திடீர் திருப்பம்: விசாரணையில் அம்பலமான இரிடியம் சொம்பு மோசடி - 5 பேர் கைது

கொள்ளை புகாரில் திடீர் திருப்பம்: விசாரணையில் அம்பலமான இரிடியம் சொம்பு மோசடி - 5 பேர் கைது
கொள்ளை புகாரில் திடீர் திருப்பம்: விசாரணையில் அம்பலமான இரிடியம் சொம்பு மோசடி - 5 பேர் கைது

ஓசூரில் கொள்ளை புகாரில் திடீர் திருப்பமாக பெண்ணை மிரட்டி செம்பு சொம்பில் இரிடியம் இருப்பதாக பறித்துச் சென்ற மோசடியில் ஈடுபட்ட 5 நபர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வாஸ்துசாலா நகரைச் சேர்ந்த ஸ்ரீதேவி, சிவசங்கர் தம்பதி, தங்கள் வீட்டிற்கு நான்கு சக்கர வாகனத்தில் வந்த 3 நபர்கள் வீட்டில் இருந்த ரூபாய் 1லட்சம், 5½ பவுன் தங்க நகைகளை மற்றும் செல்போன்களை திருடிச் சென்றுவிட்டதாக கூறி சில நாட்களுக்கு முன்பு ஓசூர் அட்கோ காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.

அதன்பேரில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வழக்குப் பதிவு செய்து கைரேகைகளை சேகரித்தனர். அதன் பின்னர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாஸ்சரண் தேஜஸ்வி நேரில் சென்று விசாரணை நடத்தி துணை ஆய்வாளர் வினோத்குமார் தலைமையில் தனிப்படை அமைத்து வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடிவந்தனர்.

இந்த நிலையில் நேற்று ஓசூரில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக வந்த 3 நபர்களை பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியதால் சந்தேகம் அடைந்த காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் தம்பதி கொடுத்த புகாரின் பேரில் தேடப்பட்டு வந்தவர்கள் என தெரிந்தது.

இதையடுத்து தம்பதி ஸ்ரீதேவி, சிவசங்கர் மற்றும் சிக்கிய 3 நபர்கள் உள்ளிட்ட 5 நபர்களிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.

ஓசூர் வாஸ்துசாலா நகரைச் சேர்ந்த ஸ்ரீதேவி - சிவசங்கர் தம்பதி தங்களது வீட்டில் செம்பு சொம்பில் 1 கோடி ரூபாய் மதிப்புடைய இரிடியம் இருப்பதாக கூறி அதை விற்பனை செய்து தர தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார். ஸ்ரீதேவி தம்பதியிடம் இரிடியம் இருப்பதாக கூறப்பட்ட செம்பு செம்பை பறிக்க திட்டமிட்ட பன்னீர் செல்வம் அடியாட்களை அனுப்பி ஸ்ரீதேவி தம்பதியினரை மிரட்டி அவர்களிடம் இருந்த சொம்பை பரித்துள்ளார்.

அந்த செம்பு சொம்பை பறிபோனதால் இதுகுறித்து காவல் துறையினரிடம் புகார் அளித்தால் தானும் மாட்டிக் கொள்வோம் என பயந்து அதனை மறைத்த ஸ்ரீதேவி தம்பதியினர் நகை மற்றும் பணம் திருட்டு போனதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் இரிடியம் இருப்பதாக செம்பு சொம்பை திருடிச்சென்ற தருமபுரி மாவட்டம் பாலக்கோடு ஜெகசமூத்திரத்தைச் சேர்ந்த பன்னீர்செல்வம் (39) முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து அரூரை சேர்ந்த வல்லரசு (23), இளையபிரபு (39), ஆகியோர் பன்னீர்செல்வம் மூலம், ஸ்ரீதேவி தம்பதியிடம் சொம்பை பறித்துச் சென்றதும், விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து ஸ்ரீதேவி, சிவசங்கர், பன்னீர்செல்வம், வல்லரசு, இளையபிரபு, ஆகிய 5 நபர்களை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்த செம்பு சொம்பையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இதில் தொடர்புடைய அரூர் பகுதியைச் சேர்ந்த விஜயபிரபாகரன், பாப்பிரெட்டிப்பட்டி பகுதியைச் சேர்ந்த சந்துரு ஆகிய 2 நபர்களையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com