உரிய ஆவணம் இன்றி கோவையில் தங்கியிருந்த சூடான் இளைஞர் கைது - புழல் சிறையில் அடைக்க உத்தரவு
பாஸ்போர்ட் மற்றும் விசா காலாவதியான நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக சட்டவிரோதமாக கோவையில் வசித்து வந்த சூடான் நாட்டு இளைஞர் கைது செய்து புழல் சிறைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
சூடான் நாட்டில் இருந்து கடந்த 2018-ம் ஆண்டு கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பட்ட படிப்பிற்காக வந்தார் முகமத் அல்மமூன் கலீத் பாப் (22) என்ற இளைஞர். இவர் தனது பாஸ்போர்ட் மற்றும் விசா காலாவதியான பிறகும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கோவை ஈச்சனாரி பகுதியில் தங்கி வந்தார்.
இந்நிலையில், ஈரோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் படித்துவரும் தனது நாட்டைச் சேர்ந்தவர்களை சந்தித்து விட்டு இன்று கோவை திரும்பும்போது வழிதவறி திருப்பூர் மாவட்டம், அவிநாசியை அடுத்த பெருமாநல்லூர் பகுதியில் நடந்து சென்றுள்ளார். அப்போது, அவ்வழியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் சந்தேகத்தின் பேரில் விசாரித்தனர்
அப்போது உண்மை தெரியவந்ததை அடுத்து அந்த இளைஞரை கைதுசெய்து அவிநாசி குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தினர். அந்த இளைஞரை புழல் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டதை அடுத்து போலீசார் புழல் சிறைக்கு அனுப்பி வைத்தனர்.