கொலைநகரமாகிறதா தலைநகரம்? - சென்னையில் ஒரேநாளில் 3 பேர் படுகொலை
சென்னை மயிலாப்பூரில் பட்டப்பகலில் இளைஞர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தலைநகரில் ஒரே நாளில் 3 பேர் படுகொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாப்பூர் நொச்சிக்குப்பத்தைச் சேர்ந்த சரவணன் மீன்பிடித்தொழிலாளி. பல்லக்குமா நகரில் உள்ள கேனால் பங்க் சாலையில் உள்ள டாஸ்மாக் கடைக்கு வந்தபோது சரவணனை வழிமறித்த 4 பேர் கொண்ட கும்பல், அவரை அரிவாளால் வெட்டி முகத்தை சிதைத்துக் கொன்றுவிட்டு தப்பிச் சென்றது.
கொலையாளிகள் தப்பிச் செல்வதை கண்ட மயிலாப்பூர் தலைமைக் காவலர் விஸ்வநாதன், காவலர் ரமேஷ் ஆகியோர் சுமார் 2 கிலோ மீட்டர் வரை விரட்டிச் சென்று இருவரை மட்டும் பிடித்தனர். அவர்கள் நொச்சிக்குப்பத்தைச் சேர்ந்த மணிகண்டன், ஷாம் என்பது விசாரணையில் தெரியவந்தது.
இப்படுகொலை சம்பவத்தின் பின்னணியில் பல நாட்களாக போடப்பட்ட பழிவாங்கும் திட்டம் குறித்து இருவரும் வாக்குமூலம் அளித்துள்ளனர். அதில், முன்விரோதம் காரணமாக டோரி மணி என்ற மணிகண்டனை 2020-ஆம் ஆண்டு அரிவாளால் வெட்டியிருக்கிறார் சரவணன். அதில் சிறை சென்று வெளியே வந்த அவரை பழிதீர்க்க காத்திருந்த எதிராளிகள் சரியான நேரம் பார்த்து சரவணனை படுகொலை செய்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் மட்டுமின்றி சென்னை ஐசிஎஃப் பகுதியில் அலெக்ஸ் என்பவரும், வண்ணாரப்பேட்டை பகுதியில் பீட்டர் என்பவரும் படுகொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
ரவுடிகளின் கொட்டத்தை ஒடுக்க புதுப்புது ஆபரேஷன்களுக்கு காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் திட்டமிட்டிருக்கும் நிலையில், தலைநகரில் அடுத்தடுத்து நடந்திருக்கும் இக்கொலை சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய காவல்துறை கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டுமென கோரிக்கைகள் எழுந்துள்ளன.