60 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவுக்கு கடத்தப்பட்ட தமிழ்நாட்டு சிலைகள் கண்டுபிடிப்பு

60 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவுக்கு கடத்தப்பட்ட தமிழ்நாட்டு சிலைகள் கண்டுபிடிப்பு
60 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவுக்கு கடத்தப்பட்ட தமிழ்நாட்டு சிலைகள் கண்டுபிடிப்பு

60 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்கா நாட்டிற்கு கடத்தப்பட்ட இரு பழமை வாய்ந்த சிலைகளை கண்டுபிடித்துள்ளது சிலை கடத்தல் தடுப்பு பிரிவு.

கும்பகோணம் அருகே உள்ள சிவபுரம் கிராமத்தை சேர்ந்த நாராயணசாமி என்பவர் தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்தப் புகாரில் கும்பகோணத்தில் உள்ள சிவகுருநாதன் சுவாமி கோயிலில் இருந்த சோமாஸ்கந்தர் மற்றும் தனி அம்மன் சிலைகள் திருடப்பட்டு, போலியான சிலைகள் மாற்றி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதனால் உடனடியாக பழமை வாய்ந்த சிலைகளை கண்டுபிடித்து தரக்கோரி புகாரில் தெரிவித்துள்ளார்.

புகாரின் பேரில் சிலைகடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்து, பாண்டிச்சேரியில் உள்ள தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனத்தில் காணாமல் போனதாக கூறப்பட்ட சிலைகளின் பழைய புகைப்படத்தை பெற்று, தற்போதுள்ள சிலைகளின் புகைப்படத்துடன் ஒப்பிட்ட போது போலியான சிலைகள் என்பது தெரியவந்தது. பழமையான சோமாஸ்கந்தர் மற்றும் அம்மன் சிலைகள் கோயில் ஊழியர்களுடன் இணைந்து கடத்தப்பட்டிருப்பதாக சிலைகடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இதனையடுத்து திருடப்பட்ட சோமாஸ்கந்தர் மற்றும் அம்மன் சிலைகளின் பழமையான புகைப்படங்களை வைத்து பல அருங்காட்சிய இணையதளங்களில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் தேடி உள்ளனர். அப்போது சோமாஸ்கந்தர் சிலை அமெரிக்கா காலிபோர்னியாவில் உள்ள நார்டன் சைமன் மியூசியத்தில் இருப்பதும், அம்மன் சிலை அமெரிக்காவின் டென்வர் மியூசியத்தில் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் 60 ஆண்டுகளுக்கு முன்பு இரு சிலைகளும் அமெரிக்காவிற்கு கடத்தப்பட்டு இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து அமெரிக்காவில் உள்ள இரு சிலைகளை மீட்கும் பணியில் தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே அமெரிக்காவிலிருந்த 10 சிலைகளை தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மீட்டு தமிழகத்திற்கு கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

- செய்தியாளர்: சுப்பிரமணியன்

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com