இலங்கை தாதா ’அங்கொட லொக்கா’ கோவையில் மரணமா ? : திடுக்கிட வைக்கும் உண்மைகள்..!

இலங்கை தாதா ’அங்கொட லொக்கா’ கோவையில் மரணமா ? : திடுக்கிட வைக்கும் உண்மைகள்..!
இலங்கை தாதா ’அங்கொட லொக்கா’ கோவையில் மரணமா ? : திடுக்கிட வைக்கும் உண்மைகள்..!

பருந்து மூலம் போதைப்பொருள் கடத்தல் செய்யும் பிரபல இலங்கை தாதா கோவையில் இறந்ததாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கையின் கொழும்புவை சேர்ந்த மதுமா சந்தன லாசந்தா பெரேரா என்ற அங்கொட லொக்கா (35) சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரராக தேடப்பட்டு வருபவர். இவர் மீது கொலை, கடத்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. எத்தனையோ வழிகளில் போதைப்பொருள் கடத்தியவர்களை பற்றி செய்திகளிலும், திரைப்படங்களிலும் பார்த்திருப்போம். ஆனால் பருந்தை பயன்படுத்தி போதைப்பொருள் கடத்தியவரைப் பற்றி கேள்விப்பட்டிருக்க மாட்டோம். அவர்தான் இலங்கை நிழல் உலக தாதாவும், கடத்தல் மன்னனுமான அங்கொட லொக்கா எனும் சர்வதேச குற்றவாளி. கடந்த சில வருடங்களாக இவர் தலைமறைவாகிய நிலையில், தமிழகத்தின் கோவையில் இவர் வசித்ததாகவும், அண்மையில் இறந்த இவரது உடல் மதுரையில் தகனம் செய்யப்பட்டதாகவும் அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகியுள்ளன.

அந்த தகவல்களின்படி, கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அவர் கோவை தப்பி வந்து, சேரன் மாநகர் பகுதியில் கடந்தாண்டு அக்டோபர் முதல் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்துள்ளார். பிரதீப் சிங் என்ற பெயரில் போலி ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை தயார் செய்து தங்கியுள்ளார். அங்கொட லொக்கா போலி ஆவணங்களை பெறுவதற்கு மதுரையில் வசிக்கும் இலங்கையை சேர்ந்த பெண்ணான சிவகாமி சுந்தரி (36) என்பவரும், திருப்பூரில் வசிக்கும் ஈரோட்டை சேர்ந்த தியானேஸ்வரன் (32) என்பவரும் உதவியுள்ளனர். அங்கொட லொக்காவின் காதலியான கொழும்புவை சேர்ந்த அமானி தாஞ்சி (27) என்ற பெண்ணும் இலங்கையிலிருந்து கடந்த மார்ச் மாதம் கோவை வந்து, அவருடன் வசித்து வந்துள்ளார். பின்பு, கொரோனா பொதுமுடக்கம் காரணமாக நாடு திரும்ப முடியாமல் இருந்த அமானி தாஞ்சி, இலங்கை குடியுரிமை கொண்டு தான் வசித்துள்ளார்.

இந்நிலையில், அங்கொட லொக்கா கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த ஜூலை 3ஆம் தேதி உயிரிழந்துள்ளார். மருத்துவமனைக்கு கொண்டு வரும் முன்பே அவர் உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்ததால், உடலை பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே, 4ஆம் தேதி சிவகாமி சுந்தரி தனது உறவினர் பிரதீப்சிங் மாரடைப்பால் உயிரிழந்ததாகவும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்ய வேண்டும் எனக்கூறி புகார் அளித்துள்ளார். ஆவணங்களை முறையாக ஆய்வு செய்யாமல் வழக்கு பதிவு செய்ய முடியாது என்பதால், சாதாரண இறப்பு வழக்காக கோவை பீளமேடு காவல்துறையினர் பதிவு செய்தனர்.

இதைத்தொடர்ந்து, அங்கொட லொக்காவின் உடல் மதுரை எடுத்து செல்லப்பட்டு அங்கு தகனம் செய்யப்பட்டுள்ளது. சிவகாமி சுந்தரி மதுரையில் வழக்கறிஞர் என்பதும், தியானேஸ்வரனுடன் அவருக்கு கல்லூரியின் போது பழக்கம் ஏற்பட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், சிவகாமி சுந்தரியின் தந்தை இலங்கை என்பதால், அதன்மூலம் அங்கொட லொக்காவுக்கு அவர் பழக்கமாகி இருக்கலாம் எனவும் காவல்துறையினர் சந்தேக்கின்றனர்.

இதற்கிடையே, அங்கொட லொக்கா தனது காதலியால் விஷம் வைத்து கொல்லப்பட்டதாக இலங்கையை சேர்ந்த ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இதையடுத்து பிரதீப் சிங் பெயரில் சமர்பிக்கப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்த கோவை பீளமேடு காவல்துறையினர், அவை போலியானவை என்பதை உறுதி செய்தனர். இதனால் இறந்ததாக கூறப்படும் அங்கொட லொக்காவின் ஆவணங்களை பிரதீப் சிங் என்ற பெயரில் சமர்பித்த சிவகாமி சுந்தரி, அமானி தான்ஜி, தியானேஸ்வரன் ஆகிய 3 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர். அத்துடன் அவர்கள் மீது சதி திட்டம் தீட்டுதல், போலி ஆவணங்களை தாக்கல் செய்தல், மோசடி உள்ளிட்ட 10 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

தற்போது இலங்கை காவல்துறையினர், கோவை காவல்துறையினரின் உதவியை நாடியுள்ளனர். மேலும், உயிரிழந்தது அங்கொட லொக்கா தானா என அறிவியல் ரீதியாக நிரூபணம் செய்வதற்கான பணியில் ஈடுபட்டுள்ளனர். உடல் தகனம் செய்யப்பட்டாலும், கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டுள்ளதால், அந்த அறிக்கைக்காக காத்திருக்கின்றனர். இயற்கை மரணமா அல்லது கொலையா என்பது கூட அறிக்கையின் அடிப்படையில் முடிவு எடுக்கலாம் என காவல்துறையினர் கூறுகின்றனர்.

மேலும் இது இரு நாடுகள் சம்மந்தப்பட்ட வழக்கு என்பதால் மாநகர காவல்துறையிடமிருந்து சிபிசிஐடி-க்கு வழக்கு மாற்றப்படலாம் என்று கூறப்படுகிறது. இதற்கிடையே கைது செய்யப்பட்டிருந்த அங்கொட லொக்காவின் காதலி அமானி தாஞ்சி 2 மாதங்களாக கர்ப்பமாக இருந்ததாகவும், தற்போது கரு கலைந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைதாவதற்கு 6 நாட்கள் முன்பு கரு கலைப்பு மாத்திரைகள் எடுத்துக்கொண்டதாலே இது ஏற்பட்டுள்ளதாகவும், தற்போது சிகிச்சையில் உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com